

ஈஷா யோகா மையத்தில் ரிஷப் ஷெட்டி நடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம் திரையிடப்பட்டது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தொடக்கத்தில் கன்னடத்தில் மட்டுமே வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பு காரணமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் ரூ.150 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலானது.
இந்நிலையில், கோவையில் உள்ள சத்குருவின் ஈஷா யோகா மையம் அறக்கட்டளையில் 'காந்தாரா' திரையிடப்பட்டது. முன்னதாக கங்கனா ரணாவத் இயக்கி நடித்திருந்த பாலிவுட் படமான 'மணிகர்னிகா' கடந்த 2019-ம் ஆண்டு சத்குருவின் ஈஷா அறக்கட்டளையில் திரையிடப்பட்டது. அந்த வகையில் 'காந்தாரா' இரண்டாவது படமாக திரைப்பட்டது.
இது தொடர்பாக ஈஷா யோகா மையத்தின் அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில், ''கன்னடத்தில் ஹிட்டான "கந்தாரா" திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக ரிஷப் ஷெட்டி, ஹோம்பேல் நிறுவனத்திற்கு நன்றி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.