‘ஜல்லிக்கட்டு’ இயக்குநருடன் கைகோத்த மோகன்லால் - ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் மோகன்லால் தனது அடுத்தப் படத்திற்காக 'ஜல்லிக்கட்டு' பட இயக்குநர் லிஜோ ஜோஸுடன் கைகோத்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
உதய்கிருஷ்ணா எழுத்தில் வைசாக் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் 'மான்ஸ்டர்'. ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு லக்ஷ்மி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபக் தேவ் இசையமைத்துள்ள இப்படம் கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் மோகன்லால் அடுத்ததாக 'ஜல்லிக்கட்டு' படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸூடன் கைகோக்க உள்ளார். பெரிதும் பாராட்டப்பட்ட இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன்லால்.
இது தொடர்பாக அவர், ''எனது அடுத்த படம் இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான மற்றும் அபார திறமையான இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸுடன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தை ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ், மேக்ஸ் லேப்ஸ் மற்றும் செஞ்சுரி பிலிம்ஸ் தயாரிக்கும்'' என தெரிவித்துள்ளார்.
இது தவிர, 'ராம்', 'லூசிஃபர் 2' படங்களில் நடித்து வருகிறார் மோகன்லால். ஷாஜி கைலாஸ் இயக்கியிருக்கும் 'அலோன்' படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
