“போராடினால் ஒரு பைசா கூட தரமாட்டேன்” - ‘லைகர்’ தோல்வி குறித்து பூரி ஜெகந்நாத்

“போராடினால் ஒரு பைசா கூட தரமாட்டேன்” - ‘லைகர்’ தோல்வி குறித்து பூரி ஜெகந்நாத்
Updated on
1 min read

'போராட்டம் நடத்தினால் ஒரு பைசா பணத்தைக் கூட திருப்பி தரமாட்டேன்' என ‘லைகர்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பூரி ஜெகந்நாத் தெரிவித்துள்ளார்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்தில் வெளியான 'லைகர்' திரைப்படம் கடும் நஷ்டத்தை சந்தித்தது. தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாக இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் 'லைகர் படம் குறித்து விநியோகஸ்தர்கள் குழுவில் பரவும் செய்தி' என கூறி வாட்ஸ்அப் ஸ்கீரீன் ஷாட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ''மொத்தம் 83 விநியோகஸ்தர்கள் லைகர் படத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 27ம் தேதி பூரி ஜெகந்நாத் வீட்டிற்கு தர்ணா செய்ய உள்ளோம். ஒவ்வொரு விநியோகஸ்தரும் 4 நாட்களுக்கு தேவையான உடைகளுடன் வரவேண்டும். அப்படி வராதவர்கள் தனிமைபடுத்தப்படுவார்கள்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்து அறிந்து கொண்ட படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பூரி ஜெகந்நாத் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் பணத்தை நிச்சயம் திருப்பி தருவேன். ஆனால், தனது மரியாதையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் தன்னிடமிருந்து ஒரு பைசா கூட வாங்க முடியாது என விநியோகஸ்தர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அந்த ஆடியோவில், "என்னை பிளாக்மெயில் செய்கிறாயா? பணத்தை நான் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதால் தர ஒப்புக்கொண்டேன். ஒரு கூட்டத்தை கூட்டி தொகையை முடிவு செய்திருந்தோம். ஒரு மாதத்துக்குள் பணம் செலுத்திவிடுவேன் என்று தெரிவித்திருந்தேன். நிபந்தனைகளை ஒப்புக்கொண்டாலும், இப்போது மிகைப்படுத்துகிறார்கள். இது படத்தை திருப்பி தர வேண்டுமா என்ற எண்ணைத்தை எனக்குள் உருவாக்கியுள்ளது.

படத்தை நிச்சயம் மரியாதை நிமித்தமாக திருப்பி தருகிறேன். ஆனால், அந்த மரியாதையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் ஒரு பைசா கூட தரமாட்டேன். நாம் அனைவரும் ஒருவகையில் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சில படங்கள் வெற்றி பெறும், சில படங்கள் தோல்வியைத் தழுவும். மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஈடுபடுங்கள். அவர்களின் பெயர்களை மட்டும் குறிப்பெடுத்துக்கொண்டு, போராடாத மற்றவர்களுக்கு நான் பணத்தை தந்துவிடுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in