“நான் கண்ட உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுத்த படம் இது” - ‘காந்தாரா’ பின்புலம் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி

“நான் கண்ட உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுத்த படம் இது” - ‘காந்தாரா’ பின்புலம் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி
Updated on
1 min read

'காந்தாரா' படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்று படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

கன்னட மொழியில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது 'காந்தாரா' திரைப்படம். இந்தப் படம் இன்று தமிழில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான முரணை சொல்ல நினைத்தேன்.

அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் சிறிய வயதில் பார்த்தது, எங்கள் கலாசாரம், நம்பிக்கைகளை வைத்து இந்தப் படத்தை பண்ணினேன். பூதகோலா, தைவாரா போன்ற காவல் தெய்வங்களை வைத்து எடுத்திருக்கிறேன். அதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. எனக்கு நடிகர் - இயக்குநர் பேலன்சிங் சவாலாக இருந்தது.

20, 30 ஆண்டுகளுக்கு முன்பு என் ஊரில் நடந்த கதை இது. விவசாயிக்கும் ஒரு வனத் துறை அதிகாரிக்கும் இடையே நடந்த மோதல் இது. உண்மையாக நடந்த இந்தச் சம்பவத்தை வெறும் விவசாயிக்கும் - அரசு அதிகாரிக்குமான பிரச்சினையாக சுருக்கிவிடக் கூடாது என நினைத்தேன். மனிதனுக்கும் - இயற்கைக்கும் இடையேயான முரண்களாக இதைப் பார்த்தேன். அதில் உள்ளூர் தெய்வத்தையும் சேர்த்து காட்சிப்படுத்தினேன்'' என்றார்.

காந்தாரா 2-ம் பாகம் வருமா என்ற கேள்விக்கு, ''அதற்கு இடமிருக்கிறது. ஆனால் உறுதியாக சொல்ல முடியாது'' என்றார்.

மேலும், ''கேஜிஎஃப் முன்பே கன்னட சினிமாவை நன்றாகவே இருந்தது. முதல் பான் இந்தியா ஸ்டார் ராஜ்குமார். படம் பல மொழிகளில் சென்றடையாததால் தான் கன்னட சினிமா குறித்து வெளியில் தெரியப்படுத்த முடியவில்லை. பார்வையாளர்கள் அப்டேட் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு இயக்குநர்களாகிய நாங்களும் அப்டேட்டாக வேண்டியுள்ளது. பொதுவாக நாம் நம்முடைய மரபு, கலாசார பண்பாட்டு ரீதியான படங்களை காட்சிப்படுத்தினால், அது மக்களுக்கு புதிய கன்டென்டாக இருக்கும் என நினைக்கிறேன்.

நான் இந்தப் படத்தை சீக்கிரமாகவே எடுத்து முடித்துவிட்டேன். டீசர் வெளியிட்ட பிறகு அதைப் பார்த்தவர்கள் பான் இந்தியாவாக்கி இருக்கலாம் என்றனர். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. எங்கு போனாலும் அது கன்னடத்திலிருந்து சென்றடையவேண்டும் என நினைத்தேன். டப் செய்யப்பட்டாலும், அதன் அசல் தன்மை மாறிவிடும் என நினைக்கிறேன். படம் ஹிட்டாகும் என நினைத்தேன். ஆனால், இந்த அளவுக்கு வெற்றியடையும் என நான் நினைக்கவில்லை'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in