Published : 10 Oct 2022 08:35 AM
Last Updated : 10 Oct 2022 08:35 AM
சினிமாவில் அவ்வப்போது ஒவ்வொரு டிரெண்ட் வந்துபோகும். திடீரென காமெடி படங்களாக, காதல் படங்களாக, பேய் படங்களாக வரிசையாக வருவது சகஜம். அந்த வரிசையில், இப்போது புராண, இதிகாசக் கதைகளைப் படமாக்குவது அதிகரித்து வருகிறது. இந்தியில் கடந்த மாதம் வெளியான ‘பிரம்மாஸ்திரா’, சக்தி வாய்ந்த அஸ்திரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் கும்பலை, ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்ற கதையை கொண்டது. இதிகாசக் கதையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி இருந்தனர்.
இதேபோல, நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன் நடித்து வெளியான ‘கார்த்திகேயா 2’, கிருஷ்ணரை மையப்படுத்தி உருவானது. புராணம் மற்றும் வரலாற்றை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த தெலுங்கு படம், பான் இந்தியா முறையில் வெளியாகி இந்தியிலும் வரவேற்பை பெற்றது.
சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’, மகாகவி காளிதாசர் எழுதிய ‘சகுந்தலை’யை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.
அடுத்து, மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள அஸ்வத்தாமன் கதையை, இந்தி நடிகர் விக்கி கவுசல், சமந்தா நடிப்பில், ‘த இம்மார்டல் அஸ்வத்தாமா’ என்ற பெயரில் உருவாக்குகின்றனர். துரோணரின் மகனான அஸ்வத்தாமன், குருஷேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக களமாடியவர். இவரது கதையை சூப்பர் ஹீரோ படமாக உருவாக்க இருக்கின்றனர்.
பிரபாஸ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஆதிபுருஷ்’, ராமாயணக் கதையை மையமாக கொண்டது. சீதையை தூக்கிச் சென்ற இலங்கை வேந்தனை வதம் செய்து மீட்கும் கதையை கிராஃபிக்ஸில் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர். இதில் ராமனாக பிரபாஸ், ராவணனாக சைஃப் அலிகான், சீதையாக கிருதி சனோன் நடித்துள்ளனர்.
அக்ஷய் குமார் நடித்துள்ள ‘ராம் சேது’, ராமாயணத்தில் வரும் ராமர் பாலம் பற்றிய கதையைக் கொண்டது. தொல்பொருள் ஆய்வாளரான அக்ஷய்குமார், அந்த பாலம் உண்மையா, பொய்யா என்பதை கண்டறிய செல்கிறார். அப்போது சந்திக்கும் பிரச்சினைகளை கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மகாபாரதக் கதை ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் சினிமாவாக எடுக்கப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இதை வெப் தொடராக தயாரிக்கிறது. இதேபோல இன்னும் சில புராண, இதிகாசக் கதைகள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. மக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால், இதுபோன்ற கதைகள் அதிகம் உருவாவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT