

நாகார்ஜுனா நடித்துள்ள ஆக்ஷன், த்ரில்லர் படம், ‘இரட்சன் - தி கோஸ்ட்’. பிரவீன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சோனல் சவுகான், குல் பனாக், அனிகா சுரேந்திரன் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். வரும் 5-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாகார்ஜுனா கூறும்போது, ‘‘நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும்போது, சொந்த ஊருக்கு வரும் சந்தோஷம் கிடைக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ மிக பெரும் வெற்றியடைந்துள்ளது. இயக்குநர் மணி மற்றும் அதில் நடித்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள். இந்த ‘இரட்சன்’ படத்தைப் பிற மொழிகளில் வெளியிட யோசித்தபோது, தமிழில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம். தமிழில், நானே டப்பிங் பேசி இருக்கிறேன். இதில் சாமுராய் கத்தி வைத்து சண்டையிடும் காட்சிகள் உள்ளது. அதற்காகப் பயிற்சிகள் மேற்கொண்டோம். ஒரு நடனக் காட்சியை சண்டை கலந்த நடனமாக மைத்துள்ளோம். அது புது அனுபவத்தை தரும்’’ என்றார்.