வைரல் வீடியோ | சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுபெற்ற நஞ்சியம்மா - எழுந்து நின்று கரகோஷம் எழுப்பிய அரங்கம்

வைரல் வீடியோ | சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுபெற்ற நஞ்சியம்மா - எழுந்து நின்று கரகோஷம் எழுப்பிய அரங்கம்
Updated on
1 min read

பழங்குடியின பாடகி நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். நடிகர் சூர்யா, ‘சூரரைப் போற்று’ படத்தைத் தயாரித்த ஜோதிகா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார். பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு (79), 2020-ம் ஆண்டுக்கான `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது.

அதேபோல், சிறந்த இயக்குநராக சச்சிக்கு (அய்யப்பனும் கோஷியும்- மலையாளம்) விருது வழங்கப்பட்டது. இயக்குநர் சச்சி மறைந்ததை அடுத்து அவரது மனைவி சஜி இந்த விருதை பெற்றார். அப்போது கண்ணீர் மல்க விருதை பெற்றுக்கொள்ள அரங்கத்தில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது. இதே அய்யப்பனும் கோஷியும் படத்தில் ''களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்'' என்ற பாடலை பாடிய நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகர் (பெண்) பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டது. விருதை அவர் பெற வரும்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்துநின்று கைதட்டி அவரை வரவேற்றனர். இதனால் அரங்கமே அதிர்ந்தது. அரங்கமே அதிர்ந்த சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டே விருது வாங்கினார் நஞ்சியம்மா.

பழங்குடியின இனத்திலிருந்து வந்து இந்தியாவின் மிகப்பெரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அடைந்த திரௌபதி முர்முவின் கரங்களில் இருந்து இந்தியாவின் சிறந்த பாடகியாக நஞ்சியம்மா விருதை பெற்ற வரலாற்று தருணம் வீடியோ, புகைப்படமாக வைரலாகி வருகிறது. விருதை பெற்றபின் நஞ்சியம்மா, `தாதா சாகேப் பால்கே' விருது பெற்ற ஆஷா பரே மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் எல்.முருகன் முன்னிலையில் ''களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக்'' பாடலை பாடி அசத்தினார்.

- RupeshKumar Gupta

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in