

பாகுபலி 2-ம் பாகத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்தது தொடர்பாக அத்திரைப்படத்தில் பணியாற்றி வரும் கிராபிக்ஸ் எடிட்டர் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி திரைப்படத்தின் 2-ம் பாகம் வேகமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகள் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 9 நிமிடம் ஓடக் கூடிய கிராபிக்ஸ் காட்சிகள் அண்மையில் சமூக வலைதளங் களில் கசிந்தது படக்குழுவினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத் சைபர் பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இத்திரைப் படத்தில் கிராபிக்ஸ் எடிட்டராக பணியாற்றி வரும் கிருஷ்ணா என்பவர்தான் இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது. விஜயவாடாவில் நேற்று அவரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.