

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள 'சட்டம்பி' திரைப்படம் தொடர்பான நேர்காணலின்போது பெண் தொகுப்பாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பியதாகவும், அவர் மீது சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. யூடியூப் சேனலின் அந்த நேர்காணலை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளால் ஸ்ரீநாத் எரிச்சலடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், கேமராவை ஆஃப் செய்த பிறகு, பெண் தொகுப்பாளரையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தகாத வார்த்தைகளால் அவர் திட்டியது காவல் நிலையத்தில் புகாராக பதிவாகியுள்ளது.
இந்த புகாரின்பேரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சில மணிநேரங்கள் முன் கொச்சி நகர போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், விசாரணையை மாலை நேரம் நடத்த வேண்டும் என ஸ்ரீநாத் போலீஸிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி, ஆஜரான அவரிடம் விசாரணை முடிந்தபின் போலீஸார் அவரை கைது செய்தனர்.
முன்னதாக, தனது செயலால் யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்த ஸ்ரீநாத் பாசி, ''நான் அதீத மன அழுத்ததில் இருந்தேன். ஆனால், அதற்காக நான் நடந்து கொண்ட விதத்திற்கு நியாயம் கற்பிக்கவில்லை. அது சரியல்ல. அது என்னுடைய தவறு தான், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக வெளியானபோது நான் மனமுடைந்து போனேன். அதற்கான பின்னூட்டங்கள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது.
என் பெயரையும், என் சினிமாவையும், என் மகிழ்ச்சியையும், மக்கள் என் மீது வைத்திருந்த அன்பையும் அவர்கள் பாழாக்கிவிட்டார்கள். நான் தற்கொலை செய்துகொண்டால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.