

''என் சினிமாவையும், என் மகிழ்ச்சியையும், மக்கள் என் மீது வைத்திருந்த அன்பையும் அவர்கள் பாழாக்கிவிட்டார்கள். நான் தற்கொலை செய்துகொண்டால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்'' என்று கும்பளாங்கி நைட்ஸ் படத்தில் நடித்த ஸ்ரீநாத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
2011-ம் ஆண்டு வெளியான 'பிரணயம்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீநாத் பாசி. '22 ஃபீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஹோட்டல்', 'ட்ரான்ஸ்', 'கும்பளாங்கி நைட்ஸ்' படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அண்மையில் அவர் அளித்த நேர்காணலின்போது, பெண் தொகுப்பாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பியதாகவும், அவர் மீது சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பெண் ஊடகவியலாளரிடம் கட்டுக்கடங்காமல் அவர் நடந்துகொண்ட விதம் விமர்சனத்திற்குள்ளானது. இதையடுத்து தனது செயலால் யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், ''நான் அதீத மன அழுத்ததில் இருந்தேன். ஆனால், அதற்காக நான் நடந்து கொண்ட விதத்திற்கு நியாயம் கற்பிக்கவில்லை. அது சரியல்ல. அது என்னுடைய தவறு தான், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பான செய்தி ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக வெளியானபோது நான் மனமுடைந்து போனேன். அதற்கான பின்னூட்டங்கள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. என் பெயரையும், என் சினிமாவையும், என் மகிழ்ச்சியையும், மக்கள் என் மீது வைத்திருந்த அன்பையும் அவர்கள் பாழாக்கிவிட்டார்கள். நான் தற்கொலை செய்துகொண்டால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் நடித்துள்ள 'சட்டம்பி' திரைப்படம் திரையிடலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நான் யாரையும் அவமானப்படுத்தவோ, காயப்படுத்தவோ இல்லை. பொதுவாக ஒருவர் அசிங்கப்படுத்தப்படும்போது என்ன செய்வாரோ நானும் அதையே தான் செய்தேன். நான் தவறாக எதும் நடந்து கொள்ளவில்லை'' என்றார்.
முன்னதாக ஸ்ரீநாத் கலந்துகொண்ட யூடியூப் சேனலின் அந்த நேர்காணலை தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளால் ஸ்ரீநாத் எரிச்சலடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், கேமராவை ஆஃப் செய்த பிறகு, பெண் தொகுப்பாளரையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தகாத வார்த்தைகளால் அவர் திட்டியது காவல் நிலையத்தில் புகாராக பதிவாகியுள்ளது.