பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்

நடிகர் கிருஷ்ணம் ராஜூ
நடிகர் கிருஷ்ணம் ராஜூ
Updated on
1 min read

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக நுழைந்து பிற்காலத்தில் வில்லனாக வலம் வந்தவர் கிருஷ்ணம் ராஜு. இவர் தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் 'ரிபல் ஸ்டார்' என அறியப்படும் கிருஷ்ணம் ராஜூ அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ராதே ஷியாம்' படத்தில் நடித்திருந்தார். மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் நடிப்பிற்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ணம் ராஜூ உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நாளை இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் இன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு தெலுங்கு திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணம் ராஜூ மறைவுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகருமான ரெபெல் ஸ்டார் கிருஷ்ணம் ராஜூவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. நடிகராகவும், அரசியல் தலைவராகவும் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் மறக்க முடியாதவை. கிருஷ்ண ராஜுவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்'' என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in