

தமிழில் குத்து, கிரி, வாரணம் ஆயிரம், பொல்லாதவன், சிங்கம் புலி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை ரம்யா. ஆப்பிள் பாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இப்போது, பெண்கள் பற்றிய அழுத்தமான கதைகளைச் சொல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கரோனா பரவலை அடுத்து ஓடிடி தளங்களில் படம் பார்க்கத் தொடங்கினேன். பல்வேறு மொழிகளின் படங்களைப் பார்த்தபோது நல்ல கதைகள் படமாக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். எனக்கும் அதுபோன்ற எண்ணம் தோன்றியது. கதைகள் கேட்கத் தொடங்கியபோது, சிலர் மட்டுமே பெண்களுக்கு அழுத்தமான கேரக்டர்களை உருவாகி இருந்தார்கள். பெண்களுக்கான கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். வலுவான பெண் கதாபாத்திரங்களைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.