பாகுபலி 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: பாகங்கள் தொடரும் என படக்குழு சூசகம்

பாகுபலி 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: பாகங்கள் தொடரும் என படக்குழு சூசகம்
Updated on
1 min read

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'பாகுபலி 2' ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இப்படத்தின் பாகங்கள் தொடரும் என படக்குழு சூசகமாக தெரிவித்துள்ளது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.

இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மும்பை திரைப்பட விழாவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஏப்ரல் 28, 2017ல் இப்படம் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

மும்பை திரைப்பட விழாவில் 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது இயக்குநர் ராஜமெளலி "நான் ஒரு கதையைக் கூறும் போது, மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பேன். அக்கதையை கூறிக் கேட்பவர்களை என்னால் ஆச்சர்யப்படுத்த முடியும். ஆனால், படமாக உருவாகும் போது எடிட்டிங்கில் 100 மாற்றங்கள் செய்வேன். ஏனென்றால் ஒரு இயக்குநராக எனக்கு நிறைய சந்தேகங்கள் எழும். ஆனால் ஒரு கதைசொல்லியாக நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பேன்.

'பாகுபலி'யைச் சுற்றி நிறைய கதைகள் உள்ளன. அக்கதை முடிய வேண்டாம் என நினைக்கிறேன். கதைகள் தொடர்வதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. திரைப்படங்கள் அவற்றின் ஒரு பகுதிதான். ஆகையால் தொடர்ச்சியாக படங்கள் வெளிவரும். 'பாகுபலி'க்கு முன், பின் என நிறைய கதைகள் உள்ளன" என்று தெரிவித்தார்.

மேலும் விற்பனைப் பொருட்கள், அனிமேஷன் தொடர்கள், காமிக்ஸ் புத்தகங்கள் என நிறைய வழிமுறைகளில் 'பாகுபலி' விரைவில் வெளிவரவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in