

“சினிமாவில் நுழைய முடியுமா என்ற பயம் எனக்குள் இருந்தது... மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றியது எளிதாக இருந்தது” என நடிகர் குரு சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாள திரையுலகில் முக்கியமான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் குரு சோமசுந்தரம். 'ஜோக்கர்', 'ஆரண்ய காண்டம்', 'மின்னல் முரளி' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் தற்போது, மோகன்லால் இயக்கி நடிக்கும் 'பரோஸ்' படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் 'தி குயின்ட்' செய்தித் தளத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ''தியேட்டர் ஆர்டிஸ்ட், சினிமா ஆர்டிஸ்ட் ரெண்டுமே நடிப்பு தான். அது ஒரு சமையல் போலத்தான். இரண்டுக்குமான பொருட்கள் ஒன்றுதான். சில வித்தியாசங்கள் மட்டும் உள்ளன. தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்து சினிமாவுக்குள் வரும்போது, அந்த ஃப்ரேமுக்குள் நடிக்க வேண்டும். கேமரா கோணங்கள் மாறும். தியேட்டர் ஆர்டிஸ்டாக இருக்கும்போது இணை நடிகரை பார்த்து பேச வேண்டியிருக்கும்.
ஆனால், சினிமாவில் லுக் போர்டு பார்த்து பேச வேண்டும். அது எனக்கு மிகவும் சிரமமாக இருக்கும். காரணம் எமோஷனலாக ஒரு சுவரை பார்த்து பேசுவது போன்ற எண்ணம் உண்டாகும். எனக்கு ஆரம்ப காலத்தில் தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்து சினிமாவுக்குள் நுழைய முடியுமா என்ற பயம் இருந்தது. பிறகு ஓடிடியில் இணையத் தொடர் ஒன்றில் நடித்தேன். இதில் எனக்கு பெரிய மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து கற்றுகொண்டிருக்கிறேன்'' என்றார்.
மோகன்லாலுடனான படம் குறித்து கேட்டபோது, ''நான் ஒரு ரசிகனைப்போலத்தான் இருந்தேன்; பயம் இருந்தது. அவருடன் நடித்தது எளிமையாக இருந்தது. அவர் நடிகராக இருந்து இயக்குநராக மாறியது போன்ற உணர்வு எனக்கு அங்கு ஏற்படவேயில்லை. சகஜமாக, ஈஸியாகத்தான் இருந்தது அவருடன் நடித்தது'' என்றார்.