Last Updated : 29 Jul, 2022 06:16 PM

 

Published : 29 Jul 2022 06:16 PM
Last Updated : 29 Jul 2022 06:16 PM

முதல் பார்வை | விக்ராந்த் ரோனா - மர்மம், திகில், ஃபான்டஸியுடன் ஏமாற்றாத படைப்பு!

தொடர்ந்து அரங்கேறும் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களைத் தேடும் போலீஸ் அதிகாரியின் பயணம்தான் படத்தின் ஒன்லைன். படத்தின் தொடக்கத்தில் நான்கு, ஐந்து குழந்தைகள் அமர்ந்து பாட்டி கூறிய கதையை சொல்கிறேன் என ஆரம்பிக்கிறார்கள். கற்பனைக் கதையான இதில் வரும் கிராமம் ஒன்றில் குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியாத சூழலில், புதிதாக அந்த ஊருக்கு வரும் காவல் துறை அதிகாரி 'விக்ராந்த் ரோனா' (கிச்சா சுதீப்) இது தொடர்பான விசாரணையில் இறங்குகிறார்.

அந்த விசாரணை பல புதிய திருப்பங்களுக்கு வழிவகுக்கிறது. இந்தக் கொலைகள் அமானுஷ்ய சக்தியால் நிகழ்கிறதா அல்லது தனி மனிதனால் நிகழ்கிறதா என்பதை டார்க் ஃபான்டஸி அட்வஞ்சர் முறையில் சொல்லும் படம்தான் 'விக்ராந்த் ரோனா'. கன்னடத்தில் உருவான இப்படம் ‘பான் இந்தியா’ முறையில் வெளியாகியுள்ளது.

விக்ராந்த் ரோனாவாக கிச்சா சுதீப். அதிகம் பேசாமல், எதற்கும் அஞ்சாத, கறார் போலீஸ் அதிகாரியாக கட்டுடல் மேனியுடன் கவனம் பெறுகிறார். உணர்ச்சிகளை பெரிய அளவில் வெளிக்காட்டாத கதாபாத்திரத்தில், ஸ்டைலாகவும், சண்டைக்காட்சிகளில் மாஸாகவும் மெச்சும் நடிப்பை பதிவு செய்கிறார். அவரைத்தொடர்ந்து இரண்டாவது நாயகன் என்று சொல்லும் அளவிற்கு நிரூப் பண்டாரி ரொமான்டிக் காட்சிகள், சண்டைக்காட்சிகளில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

நாயகி நீதா அசோக் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜாக்லின் ஃபெர்னான்டஸின் நடனமும், அவர் வரும் பாடலும் ஏற்கெனவே ஹிட் அடித்த நிலையில், திரையில் 3டியில் பார்க்கும்போது திரைவிருந்தாக அமைகிறது. தவிர, ரவிசங்கர் கௌடா, மதுசூததன் ராவ் உள்ளிட்ட பலரும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அனுப் பண்டாரி இயக்கிய பான் இந்தியா முறையில் வெளியாகியுள்ள இப்படம் 3டியில் நிச்சயம் ஒரு விஷூவல் ட்ரீட் என்ற அளவுக்கு காட்சிகள் நன்றாகவே இருக்கின்றன. டார்க் பான்டஸி படமான இதன் முதல் பாதி இலக்கே இல்லாமல் இழுத்து செல்கிறது. எதை நோக்கி படம் பயணக்கிறது என்ற குழப்பம் நீள்வதால் படத்துடன் ஒன்றமுடியவில்லை. படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கலை இயக்கம்.

நேர்த்தியான கலை வடிவமைப்பு காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. அதேபோல விஎஃப்க்ஸ், கிராஃபிக்ஸ், சண்டைக்காட்சிகள் படத்தின் தரத்தை கூட்டுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான திரைவிருந்தை ஏற்பாடு செய்து, டார்க் மோடில் கொடுத்திருக்கிறார்கள். அது ஆரம்பத்தில் இருட்டிலேயே படம் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்தாலும் பின்னர் பழகிவிடுகிறது.

முதல் பாதியின் அயற்சியை இரண்டாம் பாதி முழுமையாக விலக்கிவிடுகிறது. உண்மையில் படம் இடைவேளைக்குப் பிறகுதான் தொடங்குகிறது. ஒவ்வொரு முடிச்சாக அவிழக்கப்படும்போது, படம் உயிர்பெறுகிறது. நாமும் படத்துடன் ஒன்ற ஆரம்பிக்கிறோம். போகிற போக்கில் தீண்டாமைக் கொடுமையை மேலோட்டமாக சொல்லியிருப்பதை கூடுதல் அழுத்தத்துடன் பதிவு செய்திருக்கலாம் என தோன்றுகிறது. மேலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் 'இப்படியெல்லாம செய்வாங்க' என்ற சில லாஜிக் மீறல்கள் குறித்த கேள்விகளுக்கு ஃபான்டஸி என கூறி இயக்குநர் புற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார். க்ளைமாக்ஸில் வரும் சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி கவனம் பெறுகிறது.

வில்லியம் டேவிட் கேமரா புகுந்து விளையாடுகிறது. 3டி தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய அவரது ஒளிப்பதிவு காட்சிகளின் வெயிட்டை கூட்டுகின்றன. அஜனேஷ் லோக்நாத் இசையில், 'ராரா ராக்கம்மா' பாடல் திரையரங்கை தெறிக்கவிடுகிறது. பின்னணி இசை திகில் உணர்வை கொடுக்க தவறவில்லை. தொழில்நுட்ப ரீதியாக பலம் பொருந்திய படமாக உருவாகியிருக்கிறது.

மொத்தத்தில், 3டி உதவியுடன் மோசமான முதல் பாதியை கடந்துவிட்டால், ஆறுதல் அளித்து சில ஆச்சரியங்களை உள்ளடங்கிய இரண்டாம் பாதி உங்களை நிச்சயம் ஏமாற்றாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x