Published : 22 Jul 2022 09:31 PM
Last Updated : 22 Jul 2022 09:31 PM

4 தேசிய விருதுகளை வசப்படுத்திய ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் சிறப்பு என்ன?

சிறந்த இயக்குநர் - கே.ஆர்.சச்சிதானந்தன்; சிறந்த உறுதுணை நடிகர் - பிஜூமேனன்; சிறந்த பின்னணி பாடகர் (பெண்) - நஞ்சம்மா மற்றும் சிறந்த சண்டை இயக்கம் - ராஜசேகர், மாஃபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர்.

சிறந்த இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ள கே.ஆர்.சச்சிதானந்தன் இப்போது உயிருடன் இல்லை. எனினும், அவரது படைப்பான ‘அய்யப்பனும் கோஷியும்’ மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. அந்தப் படத்தின் சிறப்புகளை அலசும் மறுபகிர்வு கட்டுரை இது...

மலையாளத்தின் வெற்றிபெற்ற திரைக்கதையாசிரியர்களில் ஒருவர் சச்சி. அவரை இயக்குநராகவும் வெற்றிபெறச் செய்த படம், ‘அய்யப்பனும் கோஷியும்’. பிஜுமேனனும் பிருத்விராஜ் சுகுமாரனும் அய்யப்பனும் கோஷியுமாக நடித்திருக்கிறார்கள்.

மொத்தக் கதையும் இந்த இரு கதாபாத்திரங்களின் வழியே மிக இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளது. திலீபுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த ‘ராம்லீலா’விலும் இதே போன்ற வலுவான திரைக்கதையை சச்சி அமைத்திருந்தார். ஜூனியர் லால் இயக்கத்தில் சச்சி திரைக்கதையில் 2019 டிசம்பரில் வெளிவந்த ‘ட்ரைவிங் லைசன்ஸ்’ படமும் கிட்டத்தட்ட இதே மையச்சரடில் கட்டப்பட்டதுதான். ஒரு சூப்பர் ஸ்டாருக்கும் அவருடைய தீவிர ரசிகனுக்கும் வரும் தன்முனைப்பு மோதல்தான் (Ego clashes) அந்தப் படத்தின் மையம். சுராஜ் வெஞ்சாரமூடும் பிருத்விராஜும் இணைந்து நடித்த அந்தப் படத்தில் கதாபாத்திரங்கள் இரண்டும் தங்கள் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி ஒன்றையொன்று வீழ்த்த முயலும்.

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் அது அரசியல், அதிகாரவர்க்கப் பிடிப்புள்ள ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த போலீஸுக்கும் இடையிலான தன்முனைப்பு மோதலாக இருக்கிறது. மதுபானம் குடிப்பதும் வைத்திருப்பதும் தடைசெய்யப்பட்ட அட்டப்பாடி வனப் பகுதி அது. அங்கிருந்து மதுக்குப்பிகளுடன் ஊட்டி செல்லும் வழியில் போலீஸ் பரிசோதனையில் கோஷி பிடிபடுகிறான். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான அவன், அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

போதாக்குறைக்கு போலீஸை அடிக்கப் பாய்கிறான். இந்த இடத்தில் போலீஸான அய்யப்பனின் தன்முனைப்பு வெளிப்படுகிறது. காவல் நிலையத்திலும் கோஷியின் அலட்சியம் கூடுகிறது. போலீஸான அய்யப்பனுக்கும் தன்முனைப்பு மூர்க்கமாகிறது. கூடுதலாக இரண்டு பிரிவுகளையும் வழக்கில் சேர்க்கிறார். கைதுசெய்யப்பட்ட பிறகுதான் அதிகாரவர்க்கத்தில் கோஷிக்கு இருக்கும் பிடிப்பு, கைப்பற்றப்பட்ட போன் வழி தெரியவருகிறது. சில சவுகர்யங்களை அய்யப்பனே கோஷிக்குச் செய்து தருகிறான். ஆனால், கூடச் சேர்த்த பிரிவுகளால் பிணையில் வர முடியாத வழக்கில் நீதிமன்றக் காவலை கோஷி அனுபவிக்க வேண்டிவருகிறது.

சிறந்த காவலருக்கான விருது வாங்கக் காத்திருக்கும் அய்யப்பன், இதனால் அடுத்து நேரிடப் போகும் இழப்புகளை எதிர்பார்த்திருக்கவில்லை. நாயர் சாதி அல்லாத அவனுக்கு, அவனது ஆதிவாசித் தாய் அவனது பெயருடன் சேர்த்து ‘அய்யப்பன் நாயர்’ என்று வைத்திருக்கிறார். கோஷியோ கட்டப்பனையின் மதிப்புமிக்க கிறித்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

சமூகத்தின் இரு நிலைகளில் இருக்கும் இருவருக்கும் இடையில், இயல்பாகவே இருக்கும் முரண்களையும் படம் கணக்கில் எடுத்துக்கொள்கிறது; அதுபோல், முரண்பாடுகள் வார்த்தைகளாக ஆவேசமாக வெளிப்படுகின்றன. அட்டப்பாடியின் மலைகளுக்கு இடையில், அந்த மண்ணின் தனித்துவமான நாட்டார் இசையின் பின்னணியில் இந்தக் காட்சிகளை சச்சி சித்தரித்துள்ளார்.

2015-ல் இதே பிருத்விராஜ்-பிஜூ மேனன் கூட்டணியில் வெளிவந்த அவரது முதல் படமான ‘அனார்கலி’யை லட்சத்தீவுகளின் பின்னணியில் எடுத்திருப்பார். தமிழும் மலையாளமும் கலந்த அந்த நிலத்தின் பாஷையைச் சித்தரிப்பதிலும் வெற்றிபெற்றிருப்பார். ஆனால், திரைக்கதையின் தொய்வால் அந்தப் படம் அவருக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.

அய்யப்பனுக்கும் கோஷிக்கும் இடையிலான முரண்களைக் கொண்டு பல மரபான கற்பிதங்களையும் கேள்விக்கு உட்படுத்துகிறது படம். குறிப்பாக ‘ஆம்பளத்தனம்’ எனச் சமூகமும் சினிமாவும் போற்றி வளர்த்த ஒன்றைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. ‘உங்கள் வீட்டில் ஆண்களே இல்லையா?’, ‘ஆண் சாகப் பிறந்தவன்’ போன்ற வசனங்கள் படத்தில் வருகின்றன. பயம் கொண்டு பின்வாங்கும் எனக் கற்பிக்கப்பட்ட இந்தப் படத்தின் இரு பெண் கதாபாத்திரங்கள், பிருத்விராஜை வசைபாடுகின்றன.

இதற்கு முன்னால் அந்தக் கதாபாத்திரம் சற்றே தகர்ந்துபோகிறது; பிறகு அதை ஏற்றுக்கொள்கிறது. மலையாளத்தின் இளம் சூப்பர் ஸ்டாரான பிருத்விராஜ், இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது துணிச்சலானது. பிஜூ மேனன் கதாபாத்திரம் இறுதிக் காட்சி வரை தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. பொதுவாக வெகுமக்கள் படங்களில் வில்லன்கள் தங்கள் தவறுகளை உணர்ந்துகொள்வது மாதிரி பிருத்விராஜின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிஜூ மேனன் தொடக்கத்திலிருந்து களத்துக்கு ஆயத்தமாவதுபோல் ஒவ்வொரு காட்சி வழியாக உயர்ந்து ரெளத்திரமடைந்து தன் நிலையில் உறுதியுடன் நிற்கிறார். அதாவது நியாயத்தின் பக்கம். பிருத்விராஜின் கதாபாத்திரம் தன்முனைப்புக்கும் கற்பிதத்துக்கும் நியாயத்துக்கும் இடையில் தள்ளாடிக்கொண்டே இருக்கிறது.

பிருத்விராஜின் தந்தையாக நடித்துள்ள இயக்குநர் ரஞ்சித்தின் கதாபாத்திரம் வழியாகத்தான் மரபான கற்பிதங்களை இயக்குநர் சொல்ல முயன்றிருக்கிறார். அந்தக் கதாபாத்திரமே அந்தக் கற்பிதங்களின் வடிவமாக இருக்கிறது; பிருத்விராஜின் ஆண்மையையும் கேள்விக்கு உள்ளாக்கிக்கொண்டே இருக்கிறது. பிருத்விராஜின் தாய், மனைவி கதாபாத்திர உருவாக்கமும் அவை வெளிப்பட்ட விதமும் பலவீனமாக உள்ளன. ஆனால், மறுபக்கம் பிஜூ மேனனின் மனைவியாக, ஆதிவாசியாக நடித்துள்ள கெளரி நந்தாவின் கதாபாத்திரப் படைப்பு சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

போலீஸ் அய்யப்பன், நாட்டார் கலைஞராக அடவு கட்டும் அய்யப்பன் எனப் படத்தை இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். காட்டின் சுபாவம் உள்ள அய்யப்பனுக்கும் நாட்டின் சுபாவம் உள்ள கோஷிக்கும் இடையிலான சண்டையாகப் பின் பகுதியில் படம் சுவாரசியம் ஆகிறது. இந்தச் சண்டைக்குத் திரி கொளுத்துவது போல் சாபுமோன் கதாபாத்திரத்தை பிஜூ மேனன் கதாபாத்திரம் ஒரு காட்சியில் வெளுத்து வாங்குகிறது. இந்தக் காட்சியில் அய்யப்பனின் அடவு கட்டுதல் தொடங்குகிறது. படத்தின் இவ்விரு துண்டுகளுக்கும் இடையில் இந்தக் காட்சியை சச்சி நுட்பமாக உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் இன்னொரு விசேஷமான அம்சம், அமைப்பு (System) குறித்த சித்தரிப்பு. செல்வாக்குள்ள ஒருவனுக்கு சகாயம் செய்ய தாழ்ந்து வரும் அமைப்புக்கும் அதன் பணியாளருக்கும் இடையிலான முரண்பாட்டைத் தெளிவாகச் சொல்கிறது. ஜாதி, அரசியல், அமைப்பு, சமூகம் எனப் பல விஷயங்களைப் படம் கவனத்துடன் சித்தரித்துள்ளது. அதேநேரம் அது மையம் அல்ல என்பதில் தீர்மானமாகவும் இருக்கிறது. அதன் வழி சமூக மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் பழைய பொய்களை அடையாளம் காட்டுகிவதில் வெற்றி அடைந்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x