வீட்டு நாய்க்கும் சேர்த்து விமான டிக்கெட் போட சொல்லி கேட்டேனா? - ராஷ்மிகா பதில்

 வீட்டு நாய்க்கும் சேர்த்து விமான டிக்கெட் போட சொல்லி கேட்டேனா? - ராஷ்மிகா பதில்
Updated on
1 min read

தனது வீட்டு செல்ல நாய்க்குட்டிக்கும் சேர்த்து விமானத்தில் டிக்கெட் போட்டு கொடுக்குமாறு நடிகை ராஷ்மிகா மந்தனா கேட்டதாக பரவிய தகவலுக்கு அவரே உரிய விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கில் வெளியான 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதேபோல இந்தியில் அமிதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'குட்பை' படத்திலும், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் 'மிஷன் மஞ்சு', துல்கர் சல்மான் நடிக்கும் 'சீதா ராமம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே, படப்பிடிப்புக்காக மும்பை, ஹைதராபாத், சென்னை என அடிக்கடி விமானத்தில் பறந்து வரும் அவர் குறித்து செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதாவது அவர், படப்பிடிப்புக்கு வரும்போது தனது செல்ல நாய்க்குட்டி ஆரா(AURA) வுக்கும் சேர்த்து விமான டிக்கெட் வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் அவர் கேட்பதாக செய்திகள் வெளியாயின. இது தொடர்பாக பரவிய செய்தியில், 'தன்னுடைய நாய் தன்னை விட்டு பிரிந்து இருக்காது என்பதால் அதற்கும் சேர்த்து பிசினஸ் க்ளாஸ் ஃப்ளைட் டிக்கெட்டும், 5 ஸ்டார் ஹோட்டலில் சகல வசதியும் செய்து தர வேண்டும் என ராஷ்மிகா டிமாண்ட் செய்ததாகவும், தயாரிப்பாளரும் ராஷ்மிகாவின் வற்புறுத்தலால் நாய்க்கும் சேர்த்து டிக்கெட் போடுவதாகவும்' குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ''நீங்களே என் 'ஆரா' வை என்னுடன் பயணிக்க சொன்னாலும் அவள் வரமாட்டாள். அவள் என் ஹைதராபாத் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறாள். உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்த நாள் உங்களால் மகிழ்ச்சியான நாளாக மாறியது. சிரிப்பை அடக்க முடியவில்லை'' என பொய் செய்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in