கர்நாடக முதல்வர் பார்த்து கண்ணீர்விட்ட ‘777 சார்லி’ படத்துக்கு வரிவிலக்கு

கர்நாடக முதல்வர் பார்த்து கண்ணீர்விட்ட ‘777 சார்லி’ படத்துக்கு வரிவிலக்கு
Updated on
1 min read

கன்னட திரைப்படமான '777 சார்லி' படத்தைப் பார்த்திவிட்டு கண்ணீர்விட்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அந்தப் படத்திற்கு வரிவிலக்கையும் அறிவித்துள்ளார்.

கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடிக்கும் படம் '777 சார்லி'. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாபி சிம்ஹா நடிக்கும் முதல் கன்னட திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. கடந்த 10-ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மனிதனுக்கும், நாய்க்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் படம் பதிவு செய்தது. | வாசிக்க > முதல் பார்வை | 777 சார்லி - நெகிழவைக்கும் அன்பை கடத்துவதில் தடுமாறிய படைப்பு |

இந்தப் படத்தை கர்நாடக மாநில முதல்வர் பசரவாஜ் பொம்மை அண்மையில் பார்த்தார். அவருடன் அமைச்சர்கள், ஆர்.அசோக், பி.சி.நாகேஷ் ஆகியோரும் பார்த்தனர். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பசவராஜ் பொம்மை, திடீரென்று கண்ணீர்விட்டு அழுதார். தனது மறைந்த சன்னி என்ற நாயை இந்தப் படம் நினைவூட்டியதாகக் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ரக்‌ஷித் ஷெட்டியின் கேரக்டரும் அவரது நடிப்பும் அபாரம். இந்த கேரக்டரில் நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

குறிப்பாக நாயின் உணர்வுகளை கண்களால் வெளிப்படுத்தும் விதம் மிக அருமை. அனைவரும் பார்க்க வேண்டிய படம். நான் எப்போதும் சொல்வது போல தான் நிபந்தனையற்ற அன்பு எப்போதும் தூய்மையானது. இந்த சினிமா ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் சார்லி மூலம் அன்பின் தூய்மையை வெளிக் கொண்டு வந்துள்ளது" என்று உடைந்த குரலில் பேசினார். இதையடுத்து இந்தப் படத்திற்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அறிவித்துள்ளது.

ஜூன் 19 முதல் 6 மாதங்களுக்கு '777 சார்லி' டிக்கெட்டுகளின் விற்பனைக்கு மாநில சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படாது என்று கர்நாடக நிதித் துறை அதிகாரபூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு திரைப்பட டிக்கெட்டிலும் கர்நாடக அரசின் உத்தரவின்படி எஸ்ஜிஎஸ்டி வசூலிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in