

தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நடித்துள்ள 'அரபி' எனும் கன்னட படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர், அந்தப் பதவியை ராஜினமா செய்து விட்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவருக்கு தமிழக பாஜக தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது அரசியல்வாதி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட அடையாளங்களுக்கிடையே நடிகர் என்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார் அண்ணாமலை.
கன்னடத்தில் வெளியாகவுள்ள 'அரபி' படத்தில் நடித்ததன் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆர்.ராஜ்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், நீச்சல் வீரர் கே.எஸ்.விஸ்வாஸ் வாழ்வை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட இந்தப் படத்தில், விஸ்வாசின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக அண்ணாமலை ஒரு ரூபாய் மட்டுமே ஊதியமாக பெற்றார் என்று அவரே தெரிவித்தார். தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
டீசரை பொறுத்தவரை, 'சிங்கம்' கே.அண்ணாமலை ஐபிஎஸ் என்ற பெயர் வந்த சில நிமிடங்களில் சிங்கத்தின் லோகோவுடன் அண்ணாமலை புல்லட் வண்டியுடன் என்ட்ரி கொடுக்கிறார். சொற்ப காட்சிகளே கொண்ட இந்த டீசரில், ஒரு காட்சியில் நீச்சல் வீரருக்கு அண்ணாமலை பயிற்சி கொடுப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.