

'குடும்பத்தில் ஒருவர் செய்த தவறுக்காக எல்லோரையும் தண்டிப்பது எப்படி நியாயமாகும். எனக்கு விருது கிடைக்காததில் எந்த வருத்தமும் இல்லை'' என மலையாள நடிகர் இந்திரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் 52-வது திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த விருதுகள் பட்டியலை கேரள கலாசாரத் துறை அமைச்சர் சஜி செரியன் வெளியிட்டார். இந்த விருதுகள் பட்டியலில் மலையாளத்தில் வெளியான, 'ப்ரீடம் பைட்', 'மதுரம்', 'நயட்டு' உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் 'ஆர்க்கரியாம்' படத்தில் முதியவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிஜு மேனன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது தமிழ்/மலையாள நடிகை ரேவதிக்கு (பூதகாலம்) அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஆவாஸவ்யூகம்' என்னும் படம் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த வெகுஜனப் படமாக வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரனவ் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'ஹ்ருதயம்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மலையாள படமான 'ஹோம்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நடிகர் இந்திரன்ஸுக்கு இந்தாண்டு விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் விருதுப் பட்டியலில் இல்லை.
இதற்கு காரணம், 'ஃப்ரைடே பிலிம் பேக்டரி' சார்பில் 'ஹோம்' படத்தை தயாரிந்திருந்தவர் விஜய் பாபு. அவர் தற்போது பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கிறார். தனக்கு விருது கொடுக்கப்படாதது குறித்து பேசியுள்ள நடிகர் இந்திரன்ஸ், ''ஹோம் படத்தை பார்த்த அனைவரும் சிறப்பாக இருப்பதாக கூறினர். நடுவர்கள் படத்தை பார்த்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால், அதற்காக மொத்தக் குடும்பமும் தண்டிக்கப்பட வேண்டுமா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து,''விஜய் பாபு மீது புகார் மட்டுமே எழுந்துள்ளது. தீர்ப்பு வெளியாகவில்லை. ஒருவேளை விசாரணைக்குப் பின் அவர் நிரபராதி என முடிவானால், நடுவர்கள் விருது பட்டியலை சரி செய்வார்களா? எனக்கு விருது கிடைக்காததில் எந்த வருத்தமும் இல்லை. மக்களிடம் இருந்து பெறும் ஆதரவுதான் ஒரு படத்துக்கு கிடைக்கும் உண்மையான ஆதரவு. அந்த ஆதவு கிடைத்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
விஜய் பாபு தயாரிப்பில் வெளியான படங்களை நாங்கள் மதிப்பிடாததற்கு, அவர் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டபட்டது காரணமல்ல என நடுவர்கள் குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.