

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'முண்டாசுப்பட்டி' தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சுதீர் பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
விஷ்ணு விஷால், நந்திதா, காளி வெங்கட், ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராம் இயக்கத்தில் வெளியான படம் 'முண்டாசுப்பட்டி'. 2014ம் ஆண்டு சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. "சுதிர் இப்படத்தின் ரீமேக்கில் நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அடுத்ததாக அவர் இப்படத்தில் தான் நடிக்கவிருக்கிறார். அவருடன் நடிக்க இருப்பவர்கள் மற்றும் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை" என்று அந்த நடிகருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கப்படவுள்ளது.
'முண்டாசுப்பட்டி' தெலுங்கு ரீமேக்கைத் தொடர்ந்து, பேட்மிட்டன் வீரர் கோபிசந்த் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் சுதிர். இப்படத்தை ப்ரவீன் இயக்க இருக்கிறார்.
சுதீர் பாபு வில்லனாக நடித்திருக்கும் 'பாகி' இந்திப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.