

மலையாள திரைப்பட நடிகை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு துபாயிலிருந்து ஜார்ஜியா தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் மலையாள திரைப்பட நடிகை ஒருவர், நடிகரும், தாயாரிப்பாளருமான விஜய் பாபு மீது கொச்சி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், விஜய் பாபு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இதுபற்றி போலீஸார் விசாரிக்கத் தொடங்கியதும், விஜய் பாபு துபாய்க்குத் தப்பியோடினார். மே 19-ம் தேதி போலீஸில் ஆஜராவதாக விஜய் பாபு தகவல் தெரிவித்திருந்தார்.
சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இதனிடையே கேரளா போலீஸின் கோரிக்கையை ஏற்று நடிகர் விஜய்பாபுவின் பாஸ்போர்டை உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் பாபு நேற்றே துபாயில் இருந்து ஜார்ஜியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.
பின்னணி:
மலையாள திரையுலகில் 10 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சி வருபவர் விஜய் பாபு. 'ப்ரைடே பிலீம் ஹவுஸ்' (Friday Film House) தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனராக பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்திருக்கிறார். சிறுவயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தவர், பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் வெளியான 'ஹோம்' மலையாள படத்தில் மனநல மருத்துவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்நிலையில் அவர் மீது, கொச்சி காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில், விஜய் பாபு படங்களில் நடிக்க வைப்பதாக கூறி, கொச்சியில் உள்ள தனது குடியிருப்பில், பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப்பிறகு விஜய் பாபு ஃபேஸ்புக் லைவ் மூலம் தான் நிரபராதி என்றும், இந்தப் பிரச்சினையில் உண்மையாக பாதிக்கப்பட்டது நான் நான் என்று கூறி, அந்தப் பெண்ணின் பெயரை வெளிப்படுத்தினார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெயரை வெளியிட்டதால், அவர் மீது மற்றொரு வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொச்சி நகர காவல்துறை துணை ஆணையர் வி.யு.குரியகோஸ் தெரிவித்துள்ளார்.
''எனக்கு அந்தப் பெண்ணை 2018-ம் ஆண்டு முதல் தெரியும். ஆடிஷனுக்குப் பிறகு, நான் தயாரித்த படங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கினேன். அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக எனக்கு பல குறுஞ்செய்திகளை அனுப்பினார். அந்தச் செய்திகளின் 400 ஸ்கிரீன்ஷாட்கள் என்னிடம் உள்ளன. கடந்த ஒன்றரை வருடங்களாக அந்தப் பெண்ணுக்கு நான் எந்த மெசேஜும் அனுப்பவில்லை. அவர் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இவ்வாறு செய்கிறார். அந்தப் பெண்ணுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரவுள்ளேன். இது ஒரு புதிய 'மீ டூ' ஆக இருக்கட்டும். புதிய போராட்டத்தைத் தொடங்குவோம்'' என்று கூறியிருந்தார்.
இந்த ஆண்டு மார்ச் 13 முதல் ஏப்ரல் 14 வரை விஜய் பாபு தன்னை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அந்த நடிகை குற்றம்சாட்டியிருந்தார். ''திரையுலகில் நான் புதியவராக இருந்ததால் நட்பாக பழகி அறிவுரை கூறி என் நம்பிக்கையை வென்றார். ஒரு தொழில்முறை வழிகாட்டி என்ற போர்வையில், அவர் என்னை பாலியல் ரீதியாக சுரண்டினார். போதையில் வலுக்கட்டாயமாக என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். நான் மறுத்தபோதும் அவர் என்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார்'' என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.