Last Updated : 19 May, 2022 08:18 PM

 

Published : 19 May 2022 08:18 PM
Last Updated : 19 May 2022 08:18 PM

‘பான் இந்தியா’ மெகா ஹிட் படங்களை விட தமிழ், மலையாள சினிமா போக்குதான் பெஸ்ட்... ஏன்? - ஓர் அலசல்

சமீபத்திய படங்களான 'புஷ்பா', 'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப் 2' உள்ளிட்ட படங்கள் இந்திய திரைப்பட வரலாற்றையே மாற்றி எழுதியுள்ளன. தெலுங்கு, கன்னடா மொழிப் படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, அதிக வசூலை ஈட்டி சாதனை படைக்கும் என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. இது தொடர்பாக எழுந்துள்ள விவாதங்கள் பாலிவுட்டின் வீழ்ச்சி என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், 'பான் இந்தியா'வின் தோற்றம் குறித்த பேச்சுக்கு வழிவகுத்துள்ளது.

இதுவரை 'பிராந்திய சினிமா' என சுருக்கி ஓரங்கட்டப்பட்ட தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமாவின் ஆதிக்கத்திற்கு எதிராக சவால் விடும் அளவிற்கு வளர்ந்திருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது. ஆனால் மொழி, கலாசாரம் உள்ளிட்ட தடைகளை உடைத்து வெளிவரும் இந்த பான் இந்தியா திரைப்படங்கள், எதைப் பிரதிபலிக்கின்றன என்பது குறித்து விவாதிக்காமல், வெறும் கொண்டாட்டத்துடனேயே அணுகப்படுகின்றன.

மேற்கண்ட மூன்று திரைப்படங்களும் (இதில் இரண்டு படங்கள் ரூ.1000 கோடியை தாண்டி வசூலித்துள்ளது) சாதிய படிநிலைகள், தேசியம், ஆண்மையவாதம், தேவையற்ற வன்முறை ஆகியவற்றிலேயே உழன்று கிடக்கின்றன. எந்த கலாச்சார நம்பகத்தன்மையையும் வழங்கவில்லை. தேசிய சந்தையையும், பொதுப்பிரிவினரையும் மட்டும் இலக்காகக் கொண்டு உருவாக்கப்படும் இதுபோன்ற வணிகப் படங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும், சிறந்த சினிமா அனுபவத்துடன் இருந்தாலும், மொழியியல் - கலாசார பன்முகத்தன்மைக்கு எதிர்மறையாகவே உள்ளதை இங்கே கவனிக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, 1980-களில் ஒரு தேசிய விருது விழாவில் இந்திய சினிமாவை இந்தி சினிமாவாக சித்தரித்தபோது தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றியும், சமீபகாலமாக தென்னிந்தியத் திரைப்படங்கள் எப்படி அந்தக் கருத்தைச் சரி செய்யும் கருவியாக மாறியிருக்கிறது என்றும் பேசினார். இந்தியை தேசிய மொழியாகக் கோருவது குறித்து கன்னட நட்சத்திரம் சுதீப்பின் கருத்துகளிலும் இது பிரதிபலித்தது. இந்திய சினிமாவில் சமமான இடத்திற்கான இந்த பிராந்திய உரிமைக்கோரலில், தெற்கிலிருந்து வெளிவரும் மெகா பட்ஜெட் பான் இந்தியா படங்கள் கலாசார ஒருமைப்பாட்டை குறிப்பதில்லை.

ஆர்ஆர்ஆர் படத்தை எடுத்துக்கொண்டால், தீய பிரிட்டிஷார் - நல்ல இந்தியர் என்ற கதைக்களத்துடன் மதம் சார்ந்த தேசியவாதத்தை முன்னிறுத்துகிறது. அவர்கள் பேசும் இந்த தேசியவாதத்தில் சுபாஷ் போஸ், சர்தார் படேல், பகத்சிங், சிவாஜி உள்ளிட்டோர் இருக்கும்போது காந்தி, அம்பேத்கர் மற்றும் நேரு முதலானோர் இடம்பெறவில்லை.

அதேபோல, ஆதிவாசிகளின் விடுதலையை தேசியவாத நோக்கத்திற்காக சுருக்குவது சிக்கலானது. இதன் மூலம் ஆதிவாசிகளை ஒடுக்குபவர்களே ஆங்கிலேயர்கள் என்ற கருத்துருவாக்கம் எழுப்பப்படுகிறது. இரண்டு ஹீரோக்களில் ஒருவரான கொமரம் பீம் (ஜூனியர் என்டிஆர்) கோண்ட் இனக்குழுவின் தலைவர். புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசியான இவர், இந்துத்துவ படிநிலைகளில் ஆதிக்க சாதியிலிருக்கும் மற்றொரு நாயகனான ராமிடம் தனக்கு கல்வி கற்றுத்தருமாறு கேட்பது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ஆகாஸ் போயம் (கோண்ட் இனத்தைச்சேர்ந்தவர்) கூறும்போது, 'படத்தில் பீம் அப்பாவியான உன்னத ஆதிவாசியாக காட்டப்படுகிறார். படத்தில் 'ஜல், ஜங்கல், ஜமீன்' (நீர், காடு, நிலம்) என்ற முழக்கம் எழுப்பபடுகிறது. உண்மையில் இந்த முழக்கம் கோண்ட் இனத்தைச் சேர்ந்த கோமரம் பீமால் உருவாக்கப்பட்டு, அந்த இன மக்களால் ஒலிக்கப்படும் முழக்கம். ஆனால், படத்தில் இந்த முழக்கத்தை ராமர் கூறியதாக சித்தரிக்கப்பட்டுள்ளது'' என குற்றம் சாட்டுகிறார்.

'புஷ்பா' மற்றும் 'கேஜிஎஃப்' போன்ற பிற படங்கள் 'ஆர்ஆர்ஆர்' போல திரையில் புதிதாக எதையும் திணிக்கவில்லை. மாறாக, அரசுக்கு எதிரான குற்றங்களை செய்யும் ஓர் ஏழை ஹீரோ. உழைக்கும் மக்களின் மீட்பராக கிளரந்தெழுவது போன்ற பல சோர்வான மசாலா மரபுகளை மீண்டும் வலுப்படுத்துகிறது. இருப்பினும் இவை வெகுஜன ரசிகர்களின் கூட்டத்தை ஈர்த்தது. இந்திய சினிமாவை சமூக ரீதியாகவும், சினிமா ரீதியாகவும் எல்லைகளை விரிவுபடுத்தும் ஒன்றாகக் கருத வேண்டிய அவசியம் உள்ளது.

இவை எல்லாவற்றையும் தாண்டி கடந்த ஒரு தசாப்த காலமாக மலையாள சினிமா உலகிலிருந்து 'புதிய தலைமுறை' இயக்குநர்களால் வெளிவரும் திரைப்படங்கள் இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதுகின்றன. இந்தப் படங்கள் தேசிய அளவிலும் கவனம் ஈர்த்துள்ளன. இதற்கு ஓடிடி தளங்களின் வளர்ச்சி பெரும் உதவிகரமாக அமைந்துள்ளது. குறிப்பாக, 'மகேஷிண்டே பிரதிகாரம்', 'ஒழிவுதிவஸ்தே கலி', 'அங்கமாலி டைரீஸ்', 'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஜல்லிக்கட்டு'ம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', 'படா' போன்ற படங்கள் நாயக பிம்பங்களிலிருந்து விலகி படமாக்கப்பட்டுள்ளன.

அதேபோல, தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால், 2010-களிலிருந்து, 'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'பரியேறும் பெருமாள்', 'அசுரன்', 'கர்ணன்', 'சர்ப்பட்டா பரம்பரை' 'ஜெய் பீம்' போன்ற படங்களின் மூலம் சாதிய ஒடுக்குமுறையைக் கையாள்வதில் ஓர் உண்மையான புரட்சி ஏற்பட்டுள்ளது. அடர்த்தியான வித்தியாசமான கதைக்கரு கொண்ட படங்கள் வெற்றி பெற சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை என்பதை இவை நிரூபித்துக்காட்டியுள்ளது. மராத்தி திரைப்படமான 'சைராட்' படத்தின் மாபெரும் அகில இந்திய வெற்றியின் மூலம் நிரூபிக்கப்பட்டது.

பான் இந்திய சினிமா என்ற பெயரில் வெளியாகும் தற்போதைய தென்னிந்திய ப்ளாக் பஸ்டர் படங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களாக சுருங்கி, மேற்கண்ட தரமான படைப்புகளிலிருந்து விலகிவிடுகிறது.

ஓர் உண்மையான பான் இந்தியா சினிமாவுக்கான நோக்கம் என்பது மகத்தானது. திரையரங்குங்கள், ஓடிடிகள் கடந்து சிறந்த கட்டமைப்புகள் மூலம், பல்வேறு இந்திய மொழிகளில் சிறந்த சினிமா உள்ளடக்கத்தை பார்வையாளர்கள் அனுபவிக்க வேண்டும். உதாரணமாக, தேசிய விருது பெற்ற Byari மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற Iewduh போன்ற படைப்புகளை இந்திய பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொழிகளில் (ஆங்கிலத்தில் மட்டுமல்ல) பார்க்கும் வரை, உண்மையான பான்-இந்தியன் சினிமா பிறக்கப்போவதில்லை.

- ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் Nissim Mannathukkaren எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x