

நாயுடனான அன்பு குறித்து பேசும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள '777 சார்லி' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிக்கும் படம் '777 சார்லி'. இந்த படத்தில் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாபி சிம்ஹா நடிக்கும் முதல் கன்னட திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். அதேபோல் மலையாள பதிப்பின் வெளியீட்டு உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றி உள்ளார்.
'சார்லி' என்ற நாயுடனான அன்பைச் சொல்லும் நகைச்சுவைப் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் குறித்து பேசியிருந்த கார்த்திக் சுப்பராஜ், “சார்லி ஒரு அழகான படம். மனிதனுக்கும் ஒரு அற்புதமான குழந்தைக்கும் இடையிலான நிபந்தனையற்ற அன்பைச் சொல்லும் படம். இப்படத்தை தமிழில் வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியிருந்தார்.
கிட்டத்தட்ட 4 நிமிடங்களுக்கு இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட நேர ட்ரெய்லரான இதில், ஆரம்பத்தில் எந்த ஒரு சுவாரஸ்மும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார் ரக்ஷித் ஷெட்டி. இப்படியான அவரது வாழ்க்கையில், 'சார்லி' என்ற பெயர் கொண்ட நாய் அறிமுகமாகிறது. ஆரம்பத்தில் அந்த நாயை வெறுத்து ஒதுக்கும் அவர், ஒரு கட்டத்திற்கு பிறகு நாயுடன் ஐக்கியமாகிவிடுகிறார்.
தொடர்ந்து திரைக்கதை சுவாரஸ்யம் பிடிக்க, நாயைப் பிரிந்து அவர் தவிக்கும் காட்சிகள் ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. எல்லாவற்றையும் விட இறுதியில் அவர் நாயுடன் பேசும் வசனம் ஒட்டுமொத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தூரமாக அமர்ந்திருக்கும் நாயிடம், 'சார்லி உனக்கு என்ன எவ்ளோ பிடிக்கும்' என ரக்ஷித் ஷெட்டி கேட்க, உடனே அங்கிருந்து ஓடி வந்து அவரை அந்த நாய் கட்டியணைக்கும் காட்சி க்ளாஸ்! அதற்கான பின்னணி இசையும் ஈர்க்கிறது. இந்த படம் வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.