

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பெங்களூர் டேஸ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்காகிறது.
ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின், நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க, அஞ்சலி மேனன் இயக்கிய படம் 'பெங்களூர் டேஸ்'. இப்படம் மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலில் இதுவரை எந்தொரு படமும் பண்ணாத வசூல் சாதனை படைத்தது.
'பெங்களூர் டேஸ்' படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமைகளை பி.வி.பி சினிமா நிறுவனம் வாங்கி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களை வைத்து இப்படத்தினை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
நஸ்ரியா வேடத்தில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு சமந்தா "விரைவில் நிறைய நடிகர், நடிகைகள் நடிக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். அனைத்தும் முடிவான உடன் அறிவிக்கிறேன்" என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் 'பொம்மிருலு' தெலுங்கு படத்தின் பாஸ்கர் இயக்குவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழில் இருந்து ஆர்யாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார்கள். நிறைய நடிகர், நடிகைகள் நடிக்க இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.