“நல்வாழ்த்துகளுக்கு முன்பே நன்றி” - மகளின் திருமண தருணப் பகிர்வில் ரஹ்மான் நெகிழ்ச்சி

“நல்வாழ்த்துகளுக்கு முன்பே நன்றி” - மகளின் திருமண தருணப் பகிர்வில் ரஹ்மான் நெகிழ்ச்சி
Updated on
1 min read

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது மூத்த மகள் கதீஜாவின் திருமண வைபவத்தை ஒட்டி எடுக்கப்பட்ட குடும்பப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கதீஜா, ரஹீமா என்று இரண்டு மகள்களும் ஆமீன் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான கதீஜாவுக்கு நேற்று (வியாழக்கிழமை) எளிமையாக திருமணம் நடைபெற்றது. மணமகன் ரியாசுதீன் ஷேக் முகமது ஆடியோ இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதமே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், நெருங்கிய சொந்தங்கள், நட்பு வட்டாரத்துடன் நேற்று எளிமையாக திருமணம் நடைபெற்றது.

திருமணப் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், "எல்லாம் வல்ல இறைவன் புதுமணத் தம்பதியை ஆசிர்வதிப்பாராக. உங்கள் அனைவரின் அன்புக்கும், நல்வாழ்த்துகளுக்கும் முன்னரே நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் புதுமணத் தம்பதி அலங்கார இருக்கையில் அமர்ந்திருக்க பின்னணியில் ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா, இடது ஓரத்தில் ரஹ்மானின் 2வது மகள் ரஹீமா, ரஹ்மானுக்கு அருகில் அவரது மகன் ஆமீன் நிற்க, வலது ஓரத்தில் ரஹ்மானின் தாயாரின் புகைப்படம் ஆகியன இடம்பெற்றிருந்தது. ரஹ்மானின் இந்த இன்ஸ்டா பகிர்வுக்கு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதேபோல் மணப்பெண் கதீஜா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "இதுதான் என் வாழ்வில் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள். என்னவரை கரம் பிடித்தேன்" என்று பதிவிட்டுள்ளார். அவருக்கும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in