

சில நாளுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து என இயக்குநர் சனல் குமார் சசிதரன் ஃபேஸ்புக்கில் கருத்துப் பதிவுசெய்திருந்தார். நடிகரும் மஞ்சுவின் முன்னாள் கணவருமான திலீப் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ‘நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கி’ல் மஞ்சு வாரியார் சில தினங்களுக்கு முன் சாட்சியம் அளித்தார். இந்த வழக்குதான் மஞ்சுவின் இந்த நிலைக்குக் காரணம் எனக் குறிப்பிட்டு சனல் தன் சந்தேகத்தை எழுப்பியிருந்தார். மேலும் மஞ்சு சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பெயருடன் அவர்களை வெளிப்படுத்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து தனக்கு போலீஸில் இருந்து மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் சனல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மஞ்சுவின் நிலை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிக்கும் ஜனாதிபதிக்கும் புகார் அளித்திருப்பதாகவும் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார். இன்று மஞ்சு வாரியர் புகாரின் அடிப்படையில் அவர் நாகர்கோவில் அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியான பாறசாலையில் சனல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தன்னைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் அவமானப்படுத்தியதாகவும் தன் பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் வகையில் இடுகை இட்டதாகவும் மஞ்சு புகாரில் கூறியுள்ளார். மேலும் தான் போகும் இடத்துக்கெல்லாம் பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வதாகவும் அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். எர்ணாகுமள் இளமக்கர காவல் நிலையைத்தில் இந்தப் புகாரை அளித்துள்ளார். மேலும் நேற்று எர்ணாகுளம் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சனல் தான் கைதுசெய்யப்பட்டதை லைவ் வீடியோவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி சனல் சில தினங்களுக்கு முன்பு மறைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.