பிரபலத் தயாரிப்பாளர் மீது நடிகை பாலியல் புகார்

பிரபலத் தயாரிப்பாளர் மீது நடிகை பாலியல் புகார்
Updated on
1 min read


மலையாள சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான விஜய் பாபு மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். ஃப்ரெ டே ஃபிலிம் ஹவுஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார் விஜய் பாபு. இவர் முன்னணி நடிகரும்கூட. நாயக, குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.

‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஆமென்’, ‘ஹோம்’, ‘ஆடு ஒரு பீகர ஜீவியானு’, ‘ஆடு-2’, ‘ஜூன்’, ‘அடி கப்பியரே கூட்டமணி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது இவரது பட நிறுவனம். விஜய் பாபு தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்விட்டதாகவும் தனது நிர்வாணப் படத்தை வைத்து மிரட்டுவதாகவும் ஒரு நடிகை கொச்சிக் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

“விஜய் பாவுக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படுத்தியதற்காகத் தனியாக ஒரு வழக்கும் பதியப்பட்டுள்ளது. இனி விசாரணை மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், பரிசோதனைகள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டன. பிரதி இப்போது தலைமறைவாக இருக்கிறார். அவரை விசாரித்த பிறகுதான் வழக்கின் மீதான முழு விபரம் தெரிய வரும்” என இந்தப் புகார் குறித்து கொச்சி இணை ஆணையாளர் வி.யூ.குரியாக்கோஸ் தெரிவித்துள்ளார்.

விஜய்பாபு ஃபேஸ்புக் வழியாக ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் தான் நிரபராதி என்றும் அந்தப் பெண் பாதிக்கப்பட்டவர் அல்ல. நான் தான் பாதிக்கப்பட்டவன் எனச் சொல்லியிருக்கிறார். மேலும் தன் பெயரை வெளிப்படுத்தியது தவறில்லை என்றால் அந்தப் பெண்ணின் பெயரையும் வெளிப்படுத்துவதில் தவறில்லை என்றும் இதனால் வரக் கூடிய வழக்கைத் தான் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்ட நடிகை கடத்தப்பட்ட வழக்கு விசாரணை இப்போது தீவிரம் ஆகிவரும் நிலையில் இந்தத் தகவல் மலையாள சினிமாவில் பரபரப்பை விளைவித்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in