

தென்னிந்திய சினிமாவில் தெலுங்கு படங்களுக்கென தனியான ஒரு டெம்ப்ளெட் உண்டு. தெலுங்கு சினிமாவின் ஒட்டுமொத்த முகத்தையும் பாலகிருஷ்ணாவின் படங்களை வைத்து அளவிட்டு விடலாம். அதீத மசலாக்களை தடவிய கமர்ஷியல், ஆக்ஷன் படைப்புகள்தான் அங்கே உருவாக்கி விற்கவும் செய்கின்றன. நீங்கள் நம்பாவிட்டாலும், பாலகிருஷ்ணா படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமும், அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் அடிக்கின்றன. இன்றைக்கும் கூட அப்படித்தான். அண்மையில் வெளியான அவரது, 'அகாண்டா' படம் ரூ.70 கோடியில் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.150 கோடியை வசூலித்தது. மலையாள சினிமா உலகத்துக்கு அப்படியே நேர் எதிரானது தெலுங்கு சினிமா.
நாயகன் ஒரே நேரத்தில் 50 பேரை அடிக்கும் ஆக்ஷன் காட்சிகளும், ரயில் முன் சாகசம் நிகழ்த்தாத நாயகனையும் அந்த ரசிகர்கள் ஹீரோவாக ஏற்பதில்லை. தெலுங்கில் எப்போதும் நல்ல சினிமாவுக்கான வறட்சிகள் நிலவி வருவதாக விமர்சகர்களின் குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கும் நிலையில், மறுபுறம் அதன் டிரெண்ட் தற்போது மெல்ல மெல்ல மாறிவருவதாகவும் ஒருசாரார் கவனித்துச் சொல்கின்றனர். தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து பார்ப்போம்.
அந்த வகையில் 2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் முக்கியமான ஆண்டு. காரணம் அந்த வருடத்தில், 'பாகுபலி 2' 'அர்ஜூன் ரெட்டி' 'பிஎஸ்வி கருடா வேகா' 'மெண்டல் மதிலோ' உள்ளிட்ட படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் களைக்கட்டியதோடு மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவின் போக்கையும் மாற்ற உதவின. நாயக பிம்பத்தை கட்டமைக்கும் பஞ்ச் டயலாக்குகள், காலாவதியான நகைச்சுவை காட்சிகள், லாஜிக்கில்லாத காதல் காட்சிகள் என அதுவரை இருந்த படங்களிலிருந்து மேற்கண்ட படங்கள் சற்று விலகியே நின்றன. இதுபோன்ற படங்கள் வழக்கத்திலிருந்து மாறுபட்டு புதிய வகையான கதையையும், புதுவிதமான பாத்திர வடிவமைப்பையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இவை சோதனை முயற்சியாகவே கருதப்படுகிறது.
தெலுங்கு படங்களின் தரம் குறைந்துகொண்டே வந்ததால் தேசிய விருதுகள், மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் படங்களை திரையிடுவது ஒரு பெரும் கனவாகவே இருந்தது. ஆனால், புதுவகையான கதை சொல்லிகளால் இந்த நிலைமாறுவதற்கான ஒளி தென்பட ஆரம்பித்திருக்கிறது. தெலுங்கு ரசிகர்களும் கூட, மற்ற மொழிகளில் வெளியாகும் அழுத்தமான கதையம்சங்களைக்கொண்ட படங்களை பார்த்து தங்களது ரசனைகளில் மாற்றம் கண்டு வருகின்றனர். ஆகவே, தெலுங்கு இயக்குநர்களுக்கும் புதுவிதமான கன்டென்ட்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முகத்தை மாற்றிய பெருமை ராஜமௌலியையேச் சாரும். இன்றைய மாற்றங்கள் அனைத்திற்கும் விதைபோட்டது 2009-ம் ஆண்டு வெளியான அவரது 'மகதீரா' திரைப்படம். அதேபோல, 2012-ம் ஆண்டு வெளியான 'ஈகா', இந்த இரண்டு திரைப்படங்களும், தெலுங்கு சினிமாவின் மீது தேசிய அளவிலான வெளிச்சத்தை பாய்ச்ச உதவியது. சர்வதேச சந்தையை தொட இந்தப் படங்கள் உதவின. தொடர்ந்து 2015-ம் ஆண்டு வெளியானது அவரது பாகுபலி முதல் பாகம் முதல் முறையாக தெலுங்கில் பிராந்திய சினிமாக்களின் வரம்புகளை உடைத்து உலகம் முழுவதும் படத்தை கொண்டுபோய் சேர்த்தது. மற்ற இயக்குநர்களும் இந்த பார்முலாக்களை நோக்கி ஓட ஆரம்பித்தனர். தெலுங்கில் காலங்காலமாக குடிகொண்டிருந்த ஸ்டீரியோடைப்களைத் தாண்டி சிந்திக்கத் தொடங்கினர்.
2018ல் வெளிவந்த 'C/O கஞ்சேரபாலம்', 2019-ல் வெளியான 'ஜெர்ஸி' உள்ளிட்ட படங்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன. இதன் மூலம் நாடு முழுவதும் தெலுங்கு சினிமாவின் மீதான பார்வை சற்று மாறத்தொடங்கியது. படங்களின் தரம் கூடியது.'C/O கஞ்சேரபாலம்' ஓடிடி வாயிலாக பல்வேறு தரப்பு ரசிகர்களை ஈர்த்தது. மொழி, பிராந்திய தடைகளை கடந்து நல்ல சினிமா இப்போது ரசிகர்களை எளிதில் ஆட்கொண்டு வருகிறது. தெலுங்கு இயக்குநர்களும், தற்போது நாயக பிம்பத்தைக்காட்டிலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சித்து வருகிறார்கள்.
நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்கள் தெலுங்கிலிருந்து இந்திக்கு ரீமேக் செய்யும் போக்கை காணமுடிகிறது. நானி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான 'ஜெர்ஸி' திரைப்படம் ஷாயித் கபூர் நடிப்பில் தற்போது இந்தியில் வெளியாகியிருக்கிறது. அதே ஆண்டு, 'ப்ரோச்சேவரேவருரா' என்ற தெலுங்கு படம் அங்கு வெற்றி பெற்றதையடுத்து 'வில்லே' என இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இரண்டு படங்களும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கின்றன.
தெலுங்கு சினிமாவின் கதைக்களம் பாலிவுட் இயக்குநர்களால் விரும்பத்திற்குள்ளாகியிருப்பதை ரீமேக் செய்யப்படும் படங்களின் பட்டியல் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், தெலுங்கில் பங்களின் தரம் கூடியிருப்பதையும் காண முடிகிறது.
வெங்கடேஷ், வருண் தேஜ் நடிப்பில் வெளியான வெற்றிப் படமான ‘எஃப்2’ இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தில் ராஜு மற்றும் போனி கபூர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். விஷ்வக் சென்னின் 'ஹிட்: தி ஃபர்ஸ்ட் கேஸ்' ஹிந்தியில் ராஜ்குமார் ராவ் மற்றும் சன்யா மல்ஹோத்ரா நடிப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. ரவி தேஜாவின் 'க்ராக்' படத்தின் இந்தி ரீமேக் தயாராகி வருகிறது. ரவி தேஜாவின் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற அல்லரி நரேஷின் 'நாண்டி' படம் , தில் ராஜுவால் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அல்லரி நரேஷ் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார்.
அல்லு அர்ஜுனின் திரைவாழ்க்கையில் முக்கியமான பாடமான 'அல.. வைகுந்தபுரமுலு' படம் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக உயர்த்தியிருக்கிறது. அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே வேடங்களில் கார்த்திக் ஆர்யன் மற்றும் க்ரித்தி சனோன் நடிக்க உள்ளனர். இதன்மூலம் தெலுங்கு சினிமாவின் வழக்கமான முகம் மாற்றம் கண்டு வருவதை உணர முடிகிறது.