

இது 'பான் இந்தியா' சினிமா ஆதிக்கம் செலுத்தும் காலம் என எந்த தயக்கமுமின்றி கூறலாம். அண்மையில் வந்த படங்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளன. 'பாக்ஸ் ஆஃபிஸ்' ரெக்கார்டுகளை ஒன்றைவிட ஒன்று முறியடித்து சாதனை படைத்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில், மொழியில் உருவாக்கப்படும் படைப்பு, பரவலாக்கப்பட்டு, மற்ற மாநில பார்வையாளர்களையும் சென்றடைவது என்ற அளவில் 'பான் இந்தியா' முயற்சி வரவேற்கத்தக்கது. என்றாலும் கூட, 'பான் இந்தியா' படங்கள் 'பிரமாண்டம்' ' ஹீரோயிசம்' என்ற கூட்டுக்குள் சிக்கி, நல்ல கதைகளை காவு வாங்குகிறதோ என்ற பார்வையையும் திரை விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். அண்மையில் வெளியான, 'புஷ்பா தி ரைஸ்' 'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப் சாப்டர் 2' படங்களின் வரவேற்பும், அதனால் மாறும் திரையுலகின் போக்கும் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.
கரோனா தொற்று தொடங்கிய பிறகு திரைத்துறை பல்வேறு மாற்றங்களை கண்டிருக்கிறது. குறிப்பாக 'லாக்டவுன்' காலம் பல்வேறு புதிய மாற்றங்களை விதைத்திருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால், ஓடிடியின் வளர்ச்சி என்பதே இங்கிருந்துதான் தொடங்குகிறது. வீட்டில் அடைப்பட்ட மக்களுக்கு பொழுதுபோக்கு வறட்சி ஏற்பட, அவர்கள் நாடியது ஓடிடியைத்தான். 'மணி ஹெய்ஸ்ட்' பிரபலமடைந்ததும், இன்றைய 'கேஜிஎஃப்' உலகப் புகழடைந்ததும் எல்லாமே லாக்டவுன் மகிமைகள். அப்படிப் பார்க்கும்போது, கரோனா தொற்று தொடங்கிய பிறகு வெளியான 3 படங்கள் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆஃபிஸையும் அசைத்து பார்த்துள்ளன. அந்த மூன்று படங்களும் தென்னிந்தியாவிலிருந்து உருவானவை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.
அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா தி ரைஸ்' படம் உலக அளவில் ரூ.350 கோடிக்கும் மேல் வசூலித்தது. குறிப்பாக, அதன் இந்தி பதிப்பு மட்டும் ரூ.107 கோடி வசூலித்து சாதனை படைத்தது. அதன்பிறகு வந்த 'ஆர்ஆர்ஆர்' உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. அதன் இந்திப் பதிப்பு தற்போது வரை ரூ.250 கோடியை வசூலித்துள்ளது. 'கேஜிஎஃப் 2' படத்தின் இந்திப் பதிப்பு மட்டும் இதுவரை ரூ.215 கோடி எட்டியிருக்கிறது. இதற்கு முன்பு ரஜினியின் '2.0' வடக்கில் 190 கோடியையும், பிரபாஸின் சாஹோ திரைப்படம் ரூ.143 கோடியையும் வசூலித்தது.
2020-21ல் பாக்ஸ் ஆஃபிஸில் இந்தி சினிமாவின் வருவாய் 27 சதவீதமாகவும், தமிழ் சினிமாவின் வருவாய் 17 சதவீதமாகவும் இருக்கும் அதே வேளையில், தெலுங்கு சினிமாவின் பங்கு 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு நடந்த FICCI பிரேம்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியத் திரைப்படத் துறையின் ஒட்டுமொத்த வருவாயில் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் துறை 47 சதவீத பங்களிப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பாலிவுட், தெலுங்கு சினிமா ரசிகர்களின் விருப்பம் என்பதும் பெரும்பாலும் ஹீரோயிசத்தை மையமாக வைத்தே சுழன்றிருக்கிறது. இரு தரப்பு ரசிகர்களுக்கும், மாஸ் என்டர்டெயினர், ஹீரோயிச, பிரமாண்ட திரைப்படங்கள் எப்போதும் விருப்பமான தேர்வாக இருக்கும். இதைத்தான் சஞ்சய் தத் ஒரு பேட்டியில், ''வடமாநிலங்களில் ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தில் ஹீரோயிசத்தின் அடர்த்தியை பொருத்தே அமைகிறது. தென்னிந்திய திரையுலகமே கூட ஹீரோயிசத்தை மறக்கவில்லை என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். ஒரு ஹீரோவின் இன்ட்ரோ மனதை ஈர்க்கும் வகையில் அமைய வேண்டும். ஹீரோ வந்ததும் விசில் பறக்க வேண்டும். தற்போது நாம் ஹீரோயிசத்தை நோக்கி மீண்டும் திரும்பியிருக்கிறோம்'' என்று கூறியிருப்பார்.
பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற ஹீரோயிச சினிமாக்களின் வரவு குறைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். மாறாக, ஹீரோயிசத்தை தவிர்த்த அடர்த்தியான கன்டென்ட்டுகளைக் கொண்ட கதைக்களங்கள் முளைத்திருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, 'ஆர்டிக்கிள் 15', 'அந்தாதூன்', வாடகைத் தாய் குறித்து பேசப்பட்ட 'மிமி', 'கஹானி' உள்ளிட்ட படங்கள் ஹீரோயிச சினிமாவுக்கு எதிர் திசையில் பயணிக்கின்றன. 'ஆர்டிக்கிகள்15' வெளியான அதே ஆண்டில்தான் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடித்த 'வார்' ஹீரோயிச சினிமாவும் வெளியானது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமாக்களை நோக்கி பாலிவுட் தனது அடியை எடுத்து வைக்க தொடங்கியிருந்தாலும், அதனை ஹீரோயிச சினிமாக்கள் விழுங்கிவிடுகின்றன.
இதற்கு மிகச் சிறந்த சமீபத்திய உதாரணம், '83' படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி போராடிக் கொண்டிருந்த அதே வேளையில் தெலுங்கில் எடுக்கபட்ட 'புஷ்பா' திரைப்படம் வடக்கில் ஆதிக்கத்தை செலுத்தி '83' படத்தின் திரைகளை குறைத்தது. ஆக, பாலிவுட் ரசிகர்களின் ரசனைகளை மீண்டும் பிரமாண்டம், ஹீரோயிசத்தை நோக்கி நகர்த்துவதில் தெற்கிலிருந்து வரும் சினிமாக்கள் முக்கிய பங்காற்றுவதை மறுக்க முடியாது. இது தொடர்பாக வர்த்தக ஆய்வாளரும் விமர்சகருமான தரண் ஆதர்ஷ் கூறுகையில், ''தெற்கில் இருந்து வரும் சினிமா, குறிப்பாக தெலுங்கு திரைப்படங்கள், தற்போது இந்தி சினிமாவை 'அதன் பொழுதுபோக்கு மதிப்பு' காரணமாக வசூலை குவிக்க உதவுகிறது'' என்கிறார்.
சொல்லப்போனால், 'கேஜிஎஃப் 2', 'பீஸ்ட்' பட வெளியீட்டின் காரணமாக சொந்த மாநிலத்தில் எடுக்கப்பட்ட 'ஜெர்ஸி' படத்தை அவர்களால் வெளியிட முடியவில்லை. 'பான் இந்தியா' திரைப்படங்களின் ஆதிக்கம் மாநில மொழி சினிமாக்களுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. 'பான் இந்தியா' கலாசாரம் மீண்டும் ஹீரோயிச சினிமாக்களின் மீட்டெடுப்பை நிலைநிறுத்தி வருவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஓடிடி-க்களின் வருகை திரையரங்குகளை அழித்துவிடும் என்ற ஒரு சாராரின் கருத்து பரவலாக காணப்பட்டாலும், பிரமாண்ட படங்களுக்கு மட்டுமே திரையரங்குகள் சிவப்பு கம்பளமிடுவதாகவும், சிறிய பட்ஜெட்டில் தரமான கன்டென்ட்டுகளை உள்ளட்டங்கிய படங்களை திரையரங்க உரிமையாளர்களே தவிர்த்து விடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக அண்மையில் வெளியான 'டாணாக்காரன்' படத்தின் இயக்குநர், 'இந்து தமிழ் திசை'க்கு அளித்த பேட்டியில், ''டாணாக்காரன் திரையரங்குகளில் வெளிவந்திருந்தால், அடுத்த வாரமே 'பீஸ்ட்' படத்தின் வருகையால் காட்சிகள் நீக்கப்பட்டிருக்கும். ஓடிடியில்ல வெளியானது நல்ல அம்சமாக பார்க்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.
ஓப்பீட்டளவில் பார்க்கும்போது, ஓடிடி நல்ல சினிமாக்களை காணும் தளங்களாகவும், திரையரங்குகள் ஹீரோயிச, பிரமாண்ட படைப்புகளுக்கான இடமாகவும் மாறியிருப்பதையும் மறுப்பதற்கில்லை!