

'கேஜிஎஃப் 2' திரைப்படம் கிரீஸ் நாட்டில் வெளியாக இருக்கிறது. இதன்மூலம் அந்நாட்டில் வெளியாகும் முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளது இப்படம்.
கடந்த 2018-ம் ஆண்டு யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் எல்லைகளைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல். படத்தில் யஷ்ஷுடன் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், அர்ச்சனா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வர உள்ள 'கேஜிஎஃப் '2 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அண்மையில், வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், வெளியான 24 மணி நேரத்திலேயே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது.
இந்நிலையில், 'கேஜிஎஃப் 2' திரைப்படம் கிரீஸ் நாட்டில் வெளியாக இருக்கிறது. கிரீஸ் நாட்டில் வெளியாகும் முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றிருக்கிறது 'கேஜிஎஃப் 2'. அந்நாட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் வெறும் 12 மணி நேரத்தில் 5,000 டிக்கெட்டுகளை விற்று தீர்ந்துள்ளன. இதுவரை எந்த ஒரு இந்திய படத்திற்கும் இல்லாத அதிகபட்ச சாதனையாக இது கருதப்படுகிறது. 'பான் இந்தியா' திரைப்படமாக வெளியாகும் 'கேஜிஎஃப் 2' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.