

ஹைதராபாத்: ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி வெறும் 3 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
ராஜமவுளி இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபல இளம் நாயகர்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜ் மற்றும் ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் உலகமெங்கும் வெளியானது. ரூ.400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத் தியது.
சுமார் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் தற்போது வசூலில் புதிய சாதனை நிகழ்த்தி வருகிறது.
இதற்கு முன் ராஜமவுளியின் பாகுபலி 2-ம் பாகத்தின் முதல் நாள் வசூல் ரூ.217 கோடியாக சாதனை நிகழ்த்தியது. ஆனால் ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் நாள் வசூல் இதனை மிஞ்சியது. முதல் நாளே ரூ.257 கோடி வசூல் செய்தது. இதன் மூலம் தனது சாதனையை தானே முறியடித்துள்ளார் ராஜமவுளி.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி வெறும் 3 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு இலாகாவினர் தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்திலேயே இப்படத்தின் வசூல் ரூ.1,000 கோடியை தாண்டும் என தற்போது கணிக்கப் பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டுமல்லாது வெளியான அனைத்து மாநிலங்களிலும் இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என ஆர்ஆர்ஆர்தயாரிப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.