Published : 20 Mar 2022 01:11 PM
Last Updated : 20 Mar 2022 01:11 PM
பெங்களூரு: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார், ரசிகர்களால் 'பவர் ஸ்டார்' என்று அழைக்கப்பட்டு வந்த மறைந்த புனித் ராஜ்குமார் வாழ்க்கை அம்மாநில பள்ளி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பல்வேறு கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். ரசிகர்களால் 'பவர் ஸ்டார்' 'அப்பு' என்று அழைக்கப்பட்டவர், கடந்த அக்டோபர் 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரின் மரணம் கன்னட திரையுலகினர் மட்டுமில்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில தினங்கள் முன் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, புனித் ராஜ்குமாரின் திரைப்பயணத்தையும், தனிப்பட்ட உதவும் குணத்தையும் பெருமைப்படுத்தும் வகையில், அவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாக கற்பிக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
4 அல்லது 5 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகத்தில் புனித் வாழ்க்கை பற்றிய ஒரு அத்தியாயத்தை சேர்க்குமாறு பல தொண்டு நிறுவனங்களும் மக்களும் புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) கல்வித் துறைக்கு கடிதம் எழுதின. இதேபோல் பெங்களூரு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் என்.ஆர்.ரமேஷும் இதே கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தி இருந்தார். அதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநில கல்வி அமைச்சர் பி.சி நாகேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, புனித் வாழ்க்கையை படமாக்குவது தொடர்பாக அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் பி.சி நாகேஷ் உறுதியளித்தார்.
மிக இளம் வயதிலேயே சூப்பர் ஸ்டார், தேசிய விருது என்பதனை தாண்டி புனித் தனிப்பட்ட முறையில் பல உதவிகளை செய்து வந்தார். 26 அனாதை இல்லங்கள், 19 கோசாலைகள், 16 முதியோர் இல்லங்களை நடத்தி வந்தவர், பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த 4,800க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி உள்ளிட்டவைகளுக்கும் நிறைய உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...