'போராட்டத்தின் மற்றொரு வடிவம், கேரளத்தின் ரோல் மாடல்' - கரகோஷத்துக்கிடையே பாவனா என்ட்ரி

'போராட்டத்தின் மற்றொரு வடிவம், கேரளத்தின் ரோல் மாடல்' - கரகோஷத்துக்கிடையே பாவனா என்ட்ரி
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில், நடிகை பாவனாவின் வருகை தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை பாவனா. மலையாள திரையுலகில் மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். 2017-ம் ஆண்டு வெளியான ஆடம் ஜோன் திரைப்படம் பாவனாவின் கடைசி மலையாளப் படமாகும்.

இதன்பின் மலையாள படங்களில் நடிக்காத அவர், இப்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அதன்படி, 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' (Ntikkakkakkoru Premondarnn) என்ற புதிய மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாவனா. இதன் போஸ்டர் சில தினங்கள் முன் வெளியானது.

இதனிடையே, நேற்றுமுன்தினம் இரவு கேரளாவில் துவங்கியுள்ள சர்வதேச திரைப்பட விழா துவங்கியது. இந்த விழாவுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கலாச்சாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன், பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழா தொடங்கும் சில நிமிடங்கள் முன்னதாக, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக நடிகை பாவனா மேடைக்கு அழைக்கப்பட்டார்.

முன்னதாக, விழா அழைப்பிதழில் பாவனா பெயர் இல்லாத நிலையில் திடீரென அவர் பெயர் உச்சரிக்கப்பட்டதும் கூட்டத்திடம் இருந்து ஆர்ப்பரிப்பு ஏற்பட்டது. சில நிமிடங்கள் அந்த கரகோஷங்கள் எழுந்துகொண்டே இருக்க, அதற்கிடையில் "அபிநய ஸ்ரீ, பாவனா இந்த விழாவை சிறப்பாக வந்துள்ளார். போராட்டத்தின் மற்றொரு பெண் வடிவமான பாவனாவை சினேகதத்துடன் இந்த விழா மேடைக்கு அழைக்கிறோம்" என்று அழைக்கப்பட்டார். அப்போது அமைச்சர்கள் உட்பட மேடையில் இருந்த பலர் அவருக்கு எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தனர். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்து அமரச் சென்றார்.

சில நிமிடங்களில் கேரள கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் பேசுகையில், "கேரளத்தின் ரோல் மாடல் நீங்கள்" என்று பாவனாவை குறிப்பிட்டு பேசினார். இந்த வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகின்றன. நடிகை பார்வதி திருவோத்து இந்த வீடியோவை பகிர்ந்து, "வெல்கம் பேக் பாவனா. இந்த இடம் உனக்கானது" என்று குறிப்பிட்டு உள்ளார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மலையாள திரையுலகுக்கு திரும்பியுள்ள பாவனாவுக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு தொடர்பான வீடியோக்களும் படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in