

தெலுங்கில் 'குஷி 2' படத்திற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. பாடல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'தெறி' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை எஸ்.கே.சூர்யா இயக்கவிருக்கிறார் என்றும், அது 'குஷி 2' என்றும் செய்திகள் வெளியாயின.
பல்வேறு இயக்குநர்கள் விஜய்யை சந்தித்து கதைகள் கூறினர். அக்கதைகளில் இயக்குநர் பரதன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கினார் விஜய்.
இந்நிலையில், தெலுங்கில் 'குஷி' படத்தின் ரீமேக்கில் நடித்த பவன் கல்யாணை நாயகனாக வைத்து 'குஷி 2' படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதற்கான முதற்கட்ட பணிகளான பாடல்கள் உருவாக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பாடலாசிரியர் ராமஜோகியா சாஸ்திரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "எஸ்.ஜே.சூர்யாவுடனும் அனுப் உடனும் பணியாற்றுவதில் ரொம்ப ’குஷி’" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது 'சர்தார் கப்பர் சிங்' படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண், அதனைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.