Published : 06 Mar 2016 09:11 PM
Last Updated : 06 Mar 2016 09:11 PM

நடிகர் கலாபவன் மணி மரணம்; மலையாள திரையுலகம் அதிர்ச்சி

பிரபல மலையாள திரைப்பட நடிகரும், தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவருமான கலாபவன் மணி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45.



கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான கோளாறுகள் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

இந்தத் தகவல் மலையாள திரையுலகில் பரவத் தொடங்கியதும், பலரும் நம்ப முடியாமல் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். மம்முட்டி, பிருத்விராஜ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் அதிர்ச்சியையும், இரங்கலையும் பகிர்ந்தனர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

ஆட்டோ டிரைவராக இருந்து, பின்னர் மிமிக்ரி கலைஞராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய கலாபவன் மணி, தென்னிந்திய சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்கள் மூலம் முத்திரைப் பதித்தவர். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

அக்‌ஷரம் என்ற படம் மூலம் அறிமுகம் ஆனாலும், திலீப் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற சல்லாபம் என்ற படத்தில் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததன் மூலம் முக்கிய நடிகராக கவனம் பெற்றார்.

'வாசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' என்ற படத்துக்காக 1999-ல் சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை வென்றார். அதே படத்துக்காக 2000-ல் சிறப்பு ஜூரி பிரிவில் தேசிய விருதைப் பெற்றார்.

தமிழில் 'ஜெமினி' படம் மூலம் கவனத்தை ஈர்த்த கலாபவன் மணி, சமீபத்தில் வெளிவந்த கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

மனைவி நிம்மி, மகள் வாசந்தி லக்‌ஷ்மி உடன் கலாபவன் மணி வாழ்ந்து வந்தார்.

கலாபவன் மணியின் பெயருக்கு முன்னால் உள்ள கலாபவன் என்பது, கழுத்தையும் உடலையும் வளைத்துப் பலவிதமாக மிமிக்ரி செய்ய அவருக்குக் கற்றுக்கொடுத்த கலைப் பள்ளியின் பெயராகும். இது கொச்சியில் அமைந்துள்ளது.

சாலகுடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மணி, கலாபவன் மணியாக மாறி தென்னிந்திய சினிமாவில் அறியப்பட்ட முகமாக, கலாபவன் கலைப்பள்ளிதான் காரணம். தன்னை கலைஞனாக்கிய பள்ளியின் பெயரையே தன் பெயருக்கு அடையாளமாக மாற்றினார். மிருகங்களின் குரல்களை மிமிக்ரி செய்வது கலாபவன் மணியின் சிறப்பு. ‘ஜெமினி’ படத்தில் அவர் பாம்பையும், பல்லியையும் மிமிக்ரி செய்து காண்பித்ததை மறந்திருக்க மாட்டோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x