ஆந்திராவில் வெள்ள பாதிப்பு: தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி 

ஆந்திராவில் வெள்ள பாதிப்பு: தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி 

Published on

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெலுங்கு நடிகர்கள் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனர்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் ஆந்திராவின் நெல்லூர், சித்தூர், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு உள்ளிட்டோர் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதனை அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

சிரஞ்சீவி: ஆந்திராவில் வெள்ளம் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பேரழிவு என்னை வேதனை கொள்ளச் செய்கிறது. நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்குகிறேன்.

ஜூனியர் என்டிஆர்: ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை கண்டு மனமுடைந்தேன். அவர்கள் மீண்டு வருவதற்கான சிறு உதவியாக ரூ. 25 லட்சத்தை வழங்குகிறேன்.

மகேஷ்பாபு: ஆந்திராவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முதல்வர் நிவாரண நிதிக்குரூ.25 லட்சத்தை வழங்க விரும்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் ஆந்திராவுக்கு உதவ அனைவரும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in