

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் க்ளிம்ப்ஸ் யூடியூபில் சாதனை படைத்துள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி 7-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த நவ.1ஆம் தேதி அன்று ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் க்ளிம்ப்ஸ் (GLIMPSE) வெளியானது. வெளியான முதல் 12 நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பேரால் லைக் செய்யப்பட்டு மிக விரைவாக லைக் செய்யப்பட்ட வீடியோக்களின் முந்தைய சாதனைகளை முறியடித்தது. மேலும் 24 மணி நேரத்தில் 70 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
ட்விட்டர் சமூக வலைதளங்களில் #RRR என்ற ஹேஷ்டேக் உடன் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களும் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.