ரசிகரின் புற்றுநோய் சிகிச்சை செலவை ஏற்ற சிரஞ்சீவி 

ரசிகரின் புற்றுநோய் சிகிச்சை செலவை ஏற்ற சிரஞ்சீவி 
Updated on
1 min read

தனது ரசிகரின் புற்றுநோய் சிகிச்சை செலவை நடிகர் சிரஞ்சீவி ஏற்றுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘ஆச்சார்யா’, மோகன்ராஜா இயக்கத்தில் ‘காட்ஃபாதர்’, மெஹெர் ரமேஷ் இயக்கத்தில் ‘போலா ஷங்கர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (26.10.21) அன்று விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிரஞ்சீவியின் ரசிகரான வெங்கட் என்பவர் சிரஞ்சீவியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சிரஞ்சீவியைச் சந்தித்த அவர் தனக்குப் புற்றுநோய் இருப்பது குறித்தும், அதற்கு சிகிச்சை மேற்கொள்ளப் போதுமான வசதி இல்லை என்றும் அவரிடம் கூறியுள்ளார்.

வெங்கட்டின் நிலையை அறிந்த சிரஞ்சீவி அவருடைய சிகிச்சை செலவுக்குத் தான் உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், அவருடைய மருத்துவ அறிக்கைகளை வாங்கிப் பார்த்த சிரஞ்சீவி, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு இன்னொரு முறை பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த ரசிகரின் உடனடி சிகிச்சை செலவுக்காக ரூ.2 லட்சத்தையும் சிரஞ்சீவி கொடுத்துள்ளார். வெங்கட்டின் உடல்நிலை குறித்து தொடர்ந்து தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு சிரஞ்சீவி தனது அலுவலக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

சிரஞ்சீவியின் உதவி குறித்து செய்தியாளர்களிடம் வெங்கட் கூறும்போது, ''அவரது ரசிகனாக இருப்பது ஆசிர்வாதம். இந்த ஜென்மத்தில் என்னால் சிரஞ்சீவிக்குப் போதுமான நன்றி தெரிவிக்க இயலாது'' என்று தெரிவித்தார்.

பலரும் சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு சிரஞ்சீவிக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in