Published : 14 Oct 2021 04:36 PM
Last Updated : 14 Oct 2021 04:36 PM

மா உறுப்பினர்களை அடித்து வசைபாடி அச்சுறுத்தினர்: மோகன் பாபு மீது பிரகாஷ்ராஜ் பகீர் குற்றச்சாட்டு

ஹைதராபாத்

மா அமைப்பு தேர்தலின்போது உறுப்பினர்களை அடித்து வசைபாடி அச்சுறுத்தினர் என்று மோகன் பாபு மீது பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் நடந்தது. இதில் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட சர்ச்சையை முன்வைத்து பிரகாஷ்ராஜ், மா அமைப்பின் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

மேலும், பிரகாஷ்ராஜ் அணியிலிருந்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தார்கள். தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரகாஷ்ராஜ், புதிய சங்கமொன்றை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளியாகின.

இதனிடையே, மா அமைப்பு தேர்தலில் அதிகாரியாகச் செயல்பட்ட கிருஷ்ண மோகனுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தேர்தல் அதிகாரி கிருஷ்ண மோகனுக்கு...

சமீபத்தில் முடிந்த மா தேர்தல்களில் நடந்த பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு நீங்கள் சாட்சியாக இருந்தீர்கள். ஆவேசம் அதிகமாக இருந்தது. முன்னாள் டிஆர்சி உறுப்பினர் மோகன் பாபுவும், முன்னாள் தலைவர் நரேஷும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நாங்கள் பார்த்தோம்.

மா உறுப்பினர்களை அடித்து, வசைபாடி, அச்சுறுத்தினர். உங்களுக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களையும், அவர்களின் அடியாட்களையும் வாக்குச்சாவடிக்குள் நீங்கள் அனுமதித்தீர்கள் என்று நான் நினைக்கிறேன். இதில் சில காட்சிகள் ஊடகங்களிடம் கசிந்தன. நாள் முழுவதும் தலைப்புச் செய்தியானது.

மா தேர்தல்களும் அதற்குப் பின் நடந்த சம்பவங்களும், பொதுமக்கள் முன்னிலையில் நம்மைக் கேலிப் பொருளாக்கியுள்ளது. சில தெரிந்த நபர்களின் நடத்தை முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மா உறுப்பினர்கள், நடந்த சம்பவங்களின் உண்மைப் பின்னணி என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். நீங்கள் பேசியபோது வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பயன்பாடு பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவற்றில் எல்லாம் பதிவாகியிருக்கிறது என்று எனக்குத் தெரியும். எனவே அந்தப் பதிவுகளை எங்களிடம் பகிர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் சம்பந்தமான அத்தனை தரவுகளையும் பெறுவது எங்கள் ஜனநாயக உரிமை. தேர்தல் அதிகாரியான நீங்கள், அத்தனை சாட்சியங்களையும் 3 மாதங்கள் பாதுகாப்பது உங்கள் கடமை. தேர்தல் அதிகாரிகள் இப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பல்வேறு உச்ச நீதிமன்ற வழக்குகளிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

எனவே அந்தக் காணொலிப் பதிவுகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ தரவேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உடனடியாகச் செயல்படாவிட்டால் அந்தப் பதிவுகள் அழிக்கப்பட்டுவிடும் என்று நான் அஞ்சுகிறேன். இந்தக் கடிதம் பெற்றுக்கொண்டதை உறுதி செய்யவும்".

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x