

பலர் என்னைத் தூண்டிவிட முயல்கின்றனர் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் மோகன் பாபு தெரிவித்தார்.
தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் அணி தோல்வியைத் தழுவியது.
பிரகாஷ்ராஜ் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது, வெளியிலிருந்து வந்தவர், தெலுங்கு கலைஞர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற பிரச்சாரமே பிரகாஷ்ராஜின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, தன்னை ஒரு அந்நியனாகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று கூறி சங்கத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
இந்நிலையில் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது. அந்தச் சந்திப்பில் நடிகர் மோகன் பாபு கலந்துகொண்டு பேசியதாவது:
"விஷ்ணுவின் வெற்றியில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. சிங்கம் மூன்று அடி பின்வாங்கினால் அது ஒதுங்கிப் போகிறது என்று அர்த்தமல்ல. அது பெரிய பாய்ச்சலை நிகழ்த்தப் போகிறது என்றே அர்த்தம். பலர் என்னைத் தூண்டிவிட முயல்கின்றனர். ஆனால், யாருக்கு எப்போது பதில் கூற வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
இனி தெலுங்கு மாநிலங்களின் முதல்வர்களைச் சந்தித்து, கவுரவித்து, நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வோம். நமக்குப் பல அரசியல் சித்தாந்தங்கள் இருக்கலாம். குறிப்பிட்ட அரசியல் கட்சிகளோடு பிணைப்பு இருக்கலாம். ஆனால் திரைக் கலைஞர்களின் நலனுக்காக நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்".
இவ்வாறு மோகன் பாபு பேசினார்.