

பவர் இல்லாத எனக்கு ஏன் பவர் ஸ்டார் பட்டம் என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் பவன் கல்யாண்.
தேவ் கட்டா இயக்கத்தில் சாய்தரம் தேஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரிபப்ளிக்'. அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பவன் கல்யாண் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் திரைத்துறை பிரச்சினைகள், அரசியல் நிகழ்வுகள், சாய்தரம் தேஜ் விபத்து உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசினார் பவன் கல்யாண்.
திரைப்பட டிக்கெட்டுகள் விற்பனையை அரசே இணையத்தில் எடுத்து நடத்தும் என்கிற முடிவு குறித்துப் பேசிய பவன் கல்யாண், ஆந்திராவின் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். தனிப்பட்ட ஒருவர் திரைப்படம் தயாரிக்க முன்வரும்போது அவர் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்று அரசாங்கம் எப்படி நிர்பந்திக்கலாம் என்று கேள்வி எழுப்பினார். இது இந்தியக் குடியரசு என்றும், ஒய்.சி.பி குடியரசு இல்லை என்றும் சாடினார்.
மேலும், லிபியாவில் கடாஃபியின் ஆட்சி குறித்தும், அவர் செய்த குற்றங்களுக்கு அவர் எப்படித் தண்டிக்கப்பட்டார் என்றும் மேற்கோள் காட்டிய பவன் கல்யாண், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகள் கண்டிப்பாக தண்டனையைத் தேடித் தரும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தனது சகோதரர் சிரஞ்சீவியையும் விமர்சித்த பவன் கல்யாண், சமீபத்தில் திரைத்துறைக்கு உதவ வேண்டும் என்று சிரஞ்சீவி விடுத்த கோரிக்கையைப் பற்றிப் பேசினார். "ஒருவரது உரிமையைக் கேட்க ஏன் கோரிக்கை வேண்டும்? நமக்கு உரிய விஷயங்களைத் துணிச்சலுடன் கேள்வி கேட்டுப் பெற வேண்டும். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும், சிரஞ்சீவியும் சகோதரர்களைப் போல என்று ஒரு அமைச்சர் சொன்னாராம். ஒரு சகோதரர் இன்னொரு சகோதரருக்கு உதவாதபோது அப்புறம் எதற்கு அந்த பந்தம்?
திரைத்துறைக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை இவர்கள்தான் எதிர்த்துக் கேட்க வேண்டும். ஜெகனின் குடும்பத்தாருக்கு நெருக்கமான நண்பர் நடிகர் மோகன்பாபு. அவரால் ஏன் ஜெகனைச் சந்தித்துத் திரைத்துறைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசித் தீர்க்க முடியவில்லை?" என்று பவன் கல்யாண் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த உரைக்கு நடுவில், விழா தொகுப்பாளரும், ரசிகர்களும் தன்னை பவர் ஸ்டார் என்று அழைப்பதைப் பற்றிக் குறிப்பிட்டு, பவர் இல்லாத என்னை ஏன் பவர் ஸ்டார் என்று அழைக்கிறீர்கள், போதும் என்று தனது தேர்தல் தோல்வியைப் பற்றி மறைமுகமாகப் பேசினார் பவன் கல்யாண்.