

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மின்னல் முரளி' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மின்னல் முரளி'. இதில் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் ஹீரோ பாணியில் உருவாகி வரும் மலையாளப் படம் இது.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை முதலில் திரையரங்க வெளியீட்டுக்குத் திட்டமிட்டார்கள். ஆனால், கேரளாவில் கரோனா பரவல் இன்னும் எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை. ஆகையால், இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் 'மின்னல் முரளி' படத்தை நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குக் கைப்பற்றியது. எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 24-ம் தேதி 'மின்னல் முரளி' வெளியாகும் என்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது 'மின்னல் முரளி'.