விபத்தில் சிக்கிய நடிகர் சாய்தரம் தேஜ் - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் சிக்கிய நடிகர் சாய்தரம் தேஜ் - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

ஹைதரபாத் சாலை விபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ் படுகாயமடைந்தார்.

தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகராக இருப்பவர் சாய்தரம் தேஜ். நடிகர் சீரஞ்சீவியின் சகோதரி மகனான இவர் 2014ஆம் ஆண்டு வெளியான ‘பிள்ளா நூவு லேனி ஜீவிதம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘ரே’, ‘சுப்ரமணியம் ஃபார் சேல்’, ‘தேஜ் ஐ லவ் யூ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தேவா கட்டா இயக்கத்தில் ‘ரிபப்ளிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (செப்.10) மாலை சாய்தரம் தேஜ் ஹைதரபாத்தின் மாதாப்பூர் பகுதியில் தனது விலையுயர்ந்த அதிவேக ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றுள்ளார். அங்கிருக்கும் கேபிள் பாலத்தின் அருகே சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் சாய்தரம் தேஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சுயநினைவை இழந்த அவரை அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து கேள்விப்பட்ட நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அரவிந்த், பவன் கல்யாண் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். அதன் பிறகு அங்கிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு சாய்தரம் தேஜ் மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சாய்தரம் தேஜின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மூளை, முதுகெலும்பு ஆகியவற்றில் எந்த காயங்களும் இல்லையென்றும், தோள்பட்டை எலும்பில் மட்டும் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை பகிர்ந்துள்ள சிரஞ்சீவி இன்னும் இரண்டு நாட்களில் சாய்தரம் தேஜ் வீடு திரும்புவார் என்றும் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in