

ஹைதராபாத்: போதைப் பொருள் விவகாரத்தில் ஹவாலா பணம் கைமாறியதா எனும் கோணத்தில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த 12 பேரிடம் அமலாக்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவிடம் நேற்று 6 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 2017-ம் ஆண்டு கூட இவரிடம் போதைப் பொருள் விவகாரத்தில் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவரின் கார் ஓட்டுநர் ஸ்ரீநிவாஸ் தான் ரவி தேஜாவை போதைப் பொருள் விற்பனையாளர் கெல்வினுக்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் ஸ்ரீநிவாஸ் இதேபோன்ற பல நடிகர், நடிகைகளையும், கெல்வினுக்கு அறிமுகப்படுத்தியதாக அமலாக்கத் துறையினர் கருதுவதால், நேற்று ஸ்ரீநிவாஸையும், கெல்வினையும் ரவி தேஜாவுடன் சேர்த்து விசாரணை நடத்தினர். முன்னதாக காலை 10. 30 மணிக்கு ஆஜராக வேண்டிய ரவி தேஜா, சுமார் அரை மணி நேரம் முன்னதாகவே அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் கெல்வின் குறித்தும், எஃப் கிளப் குறித்தும், போதைப் பொருள் உபயோகிப்பது குறித்தும், வங்கி கணக்குகள் விவரங்கள் குறித்தும் 6 மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, நடிகர் நவ்தீப், எஃப் கிளப் மேலாளர், நடிகை முமைத்கான், நடிகர் தனீஷ், நடிகை ரோஜாரமணியின் மகனும், நடிகருமான தருண் ஆகியோரிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.