

'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடித்த 'வேதாளம்' படத்தை இயக்கினார் சிவா. அனிருத் இசையமைத்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்தார். 2015ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் பெரும் வசூல் சாதனை படைத்தது.
இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இப்படத்தின் உரிமைகள் ஏ.எம்.ரத்னம் வசம் உள்ளது.
தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் பவன் கல்யாண் - ஏ.எம்.ரத்னம் இருவரும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள். இப்படம் 'வேதாளம்' ரீமேக்காக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் 'குஷி' 2ம் பாகத்துக்கான கதையில் பவன் கல்யாணை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 'குஷி' படத்தின் தயாரிப்பாளரும் ஏ.எம்.ரத்னம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பவன் கல்யாண் நடித்து வரும் 'சர்தார் கபார் சிங்' படத்தைத் தொடர்ந்து வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. இதனால், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் 'குஷி 2' அல்லது 'வேதாளம்' ரீமேக் இரண்டில் எதை தேர்வு செய்யவிருக்கிறார் என்பது தெரியவரும்.