நடிகர் சுதீப் பிறந்த நாளுக்கு எருமையை பலி கொடுத்த ரசிகர்கள்: காவல்துறை நடவடிக்கை

நடிகர் சுதீப் பிறந்த நாளுக்கு எருமையை பலி கொடுத்த ரசிகர்கள்: காவல்துறை நடவடிக்கை
Updated on
1 min read

கன்னட நடிகர் சுதீப்பின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் எருமை ஒன்றை பலி கொடுத்த ரசிகர்கள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுதீப். கிச்சா சுதீப் என்று அறியப்படும் இவர் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக அங்கு உச்சத்தில் இருந்து வருகிறார். தமிழில் 'நான் ஈ', 'புலி', 'முடிஞ்சா இவனைப் புடி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இயக்கம், தயாரிப்பு, பாடகர் எனப் பன்முகத் திறமை கொண்ட சுதீப் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கன்னடப் பதிப்பைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த 2ஆம் தேதி சுதீப் தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அனைத்து நடிகர்களின் பிறந்த நாளைப் போல இவரது பிறந்த நாளையும் ரசிகர்கள் பலர் அவரவர் இருக்கும் பகுதிகளில் கொண்டாடினர். கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர், உற்சாக மிகுதியில் ஒரு எருமை மாட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தால் சுதீப்பின் போஸ்டருக்கு அபிஷேகம் செய்துள்ளனர்.

இந்தக் காணொலி சமூக வலைதளங்களில், உள்ளூர் செய்தி ஊடகங்களில் பரவியது. காவல்துறையின் கவனத்துக்கு இந்த விஷயம் வர, இப்படி எல்லை மீறி ஆட்டம் போட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த 25 ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in