

'பாகுபலி' படத்திற்கு கிடைத்த பாராட்டுகளை தன் தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன் என இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
’பாகுபலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனக்கு பாலிவுட்டிலிருந்து நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், விரைவில் கரண் ஜோஹாருடன் ஒரு படத்துக்காக இணையும் வாய்ப்புள்ளது என்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிடோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியானது ’பாகுபலி’. வெளியான அனைத்து மொழிகளிலும், இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் - தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவான ’பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிவருகிறது. அது முடியும் வரை தன்னால் அடுத்த படத்தைப் பற்றி யோசிக்க முடியாது என இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.
"ஆம் எனக்கு பாலிவுட்டிலிருந்து நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் 'பாகுபலி' முடியும் வரை என்னால் எந்த வாய்ப்பையும் எடுத்துக் கொள்ள முடியாது என அவர்களுக்குத் தெரியும். ஆனால் பாலிவுட் படத்தை இயக்கும் ஆசை எனக்குள்ளது.
கரண் ஜோஹாரின் தயாரிப்பு நிறுவனத்துக்காக படம் இயக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் எப்போது என தெரியவில்லை" என்று ராஜமௌலி கூறியுள்ளார்.
’பாகுபலி 2’ம் பாகம் தாமதமாவதாக வந்த செய்திகள் பற்றி பேசிய ராஜமௌலி, அந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து வருகிறது என்றும், தனியான 2-வது பாகமாக இல்லாமல், முதல் படத்தின் தொடர்ச்சியாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"2-ஆம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. கடந்த படப்பிடிப்பை திட்டமிட்டதற்கு முன்னதாகவே முடித்துள்ளோம். இதுவரை அப்படி நடந்ததில்லை. மேலும் இந்தப் படத்தின் 3-ஆம் பாகமும் திட்டமிடப்பட்டுள்ளது. ’பாகுபலி’யின் கதை பெரியது. எனவே அது தொடரும். இது ஒரு பெரிய ஃப்ரான்சைஸ். நீண்ட நாட்களுக்கு இருக்கும்" என்றார்.
2-ஆம் பாகத்துக்கு முடிவு (Baahubali: The Conclusion) எனப் பெயர் வைத்ததன் காரணத்தைப் பற்றிக் கூறும்போது, "2-ஆம் பாகத்துக்கு முடிவு (conclusion) என பெயரிப்பட்டதன் காரணம், நாங்க ஆரம்பித்த கதையின் முடிவு என்பதே. ’பாகுபலி’யில் உலகிலுள்ள கதைகள் தொடரும்" என ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
மேலும் "எந்த அழுத்தத்தையும் நான் உணரவில்லை. எனது கடந்த படத்தின் பாராட்டுகளை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன். சென்ற படம் முடிந்துவிட்டது. நல்லது கெட்டது என அனைத்தும் கடந்துவிட்டது. அது எனது அடுத்த படத்தின் மீது அழுத்தம் செலுத்த நான் விடுவதில்லை. ஆனால் அதிக எதிர்பார்ப்புகள் இருப்பது எனக்குத் தெரியும். அது எனது எண்ணத்தில் இருக்கும். அது எனது வேலையை பாதிக்காமல் பார்த்துக் கொள்வேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.