தெலுங்கில் பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: இப்போதே தொடங்கிய போட்டா போட்டி

தெலுங்கில் பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: இப்போதே தொடங்கிய போட்டா போட்டி
Updated on
1 min read

பொங்கலுக்கு வெளியாகவுள்ள படங்களை விளம்பரப்படுத்துவதில் தெலுங்குத் திரையுலகினர் மத்தியில் இப்போதே போட்டா போட்டி தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒரே கட்டமாக முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி வெளியிட்டு விடவேண்டும் என்ற முனைப்பில் பணிபுரிந்து வருகிறார்கள். சில படங்கள் இப்போதே வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துள்ளன. அப்படங்களை விளம்பரப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

அந்த வகையில் பவன் கல்யாண் - ராணா நடித்து வரும் 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக், மகேஷ் பாபு நடித்து வரும் 'சர்காரு வாரிபட்டா', பிரபாஸ் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் தவிர்த்து வெங்கடேஷ் நடித்துவரும் 'எஃப் 3' படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது.

இந்நிலையில் 'சர்காரு வாரிபட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் சமீபத்தில் வெளிட்டனர். அத்துடன் படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். இது தொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின.

இதனைத் தொடர்ந்து நேற்று 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக்கான ‘பீம்லா நாயக்’ படக்குழுவினர் படத்தின் முதல் பாடலை விரைவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்றைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியீடு என்று குறிப்பிட்டுள்ளனர்.

பொங்கலுக்கு இன்னும் ஏறக்குறைய ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில், தெலுங்குத் திரையுலகினர் மத்தியில் படங்களை விளம்பரப்படுத்துவதில் இப்போதே போட்டி தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in