ஷங்கர் - ராம்சரண் படத்தின் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்

ஷங்கர் - ராம்சரண் படத்தின் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்
Updated on
1 min read

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குநர் ஷங்கர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் எஸ்.எஸ்.தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷங்கர் - தமன் இருவருமே பாடல்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தமன். பின்பு இசையமைப்பாளராக உருவாகி தற்போது ஷங்கர் படத்துக்கே தமன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

ஷங்கர் படத்தில் இசையமைப்பாளராகப் பணிபுரியவிருப்பது குறித்து தமன் கூறியிருப்பதாவது:

"2000 முதல் 2021 வரை சினிமா கடந்து ஷங்கரின் அறிவியல் மற்றும் வாழ்க்கை குறித்த சிந்தனையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த அற்புதமான மனிதருக்குப் பின்னால் இப்போதும் அதே சக்தியையும் ஒளியையும் நான் பார்க்கிறேன். ’#RC15’ படக்குழுவில் இசையமைப்பாளராக இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘நாயக்’ மற்றும் ’ப்ரூஸ் லீ’ படத்துக்குப் பிறகு ராம் சரணுக்கு என்னுடைய அன்பைக் காட்டும் நேரம் இது. எப்போதும் அன்பையும் அதீத உற்சாகத்தையும் கொண்ட ஒரு மனிதர் அவர். அருமையான மனிதர் மற்றும் சகோதரர். லவ் யூ சகோதரா. என்னுடைய சிறப்பான உழைப்பை வழங்குவேன்.

என்னை ஒரு இளைய சகோதரனாக நினைத்து எனக்கும், என்னுடைய இசைக்கும் ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தி வரும் தில்ராஜு மற்றும் அவருடைய தயாரிப்புக் குழுவினர் நிறைய அன்பும் ஆதரவும் அளிக்கின்றனர். ஒரு குழுவாக இணைந்து இந்த '#RC15' படத்தை நினைவில் நிற்கக்கூடிய ஒன்றாக உருவாக்குவோம்".

இவ்வாறு தமன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in